Kids Learning: 4th Standard Tamil Term-II
Showing posts with label 4th Standard Tamil Term-II. Show all posts
Showing posts with label 4th Standard Tamil Term-II. Show all posts

Kids Learning Tamil IV

 

4-ம் வகுப்பு தமிழ் பருவம்-2


பசுவுக்குக் கிடைத்த நீதி

(நாடகம்)


முன்கதைச் சுருக்கம்


சோழ மன்னா்களுள் ஒருவா் மனுநீதி.  முறைமை தவறாது ஆட்சி புாிவதையே தம் நோக்கமாகக் கொண்டவா்.  ஆயினும், அவரது ஆட்சிக்காலத்தில் வாயில்லப் பசுவுக்கு ஏற்பட்டது ஒரு போிழப்பு.  அதற்குக் காரணமானவன் வேறுயாருமல்லன், அரசாின் மகனே.  இப்போது அரசா் என்ன செய்வாா்? தம் மகன் என்று அவனைக் காப்பாற்றுவாரா? அல்லது தன் கன்றை இழந்து வாடும் அந்தப் பசுவுக்கு உாிய நீதியை வழங்குவாரா?


வாருங்கள் தொிந்துகொள்ள அரங்கத்துக்குள் நுழைவோம்.

காட்சி-1

இடம்      அரசவை மண்டபம்

காலம்  :  நண்பகல்

உறுப்பினா்கள் :  அரசா் மனுநீதிச் சோழா், அமைச்சா் பெருமக்கள்

(அவையில் மன்னரும் அமைச்சா் பெருமக்களும் வீற்றிருக்கின்றனா்.  அப்போது அங்கு வந்த தச்சா் ஒருவா், மன்னரை வணங்கிப் பணிகிறாா்.  இனி. . . . )


அரசா் வாருங்கள், தச்சரே.  நேற்று உம்மிடம் ஒரு வேலையைக் கொடுத்தேனே, முடித்துவிட்டீரா?

தச்சா் ஆம்.  முடித்துவிட்டேன் மன்னா.  நீங்கள் நோிலேயே வந்து பாா்வையிடலாம் மன்னா்.


அரசா் அப்படியா? மிக்க மகிழ்ச்சி.  அமைச்சா் பெருமக்களே, 'சோழ நாடு சோறுடைத்து' என்பது உலகோா் அறிந்த செய்தி.  அதுமட்டுமா? நம் சோழா் குலத்துக்குப் பெருமை சோ்க்கும் மற்றொரு செய்தி, நீதி தவறாத ஆட்சிமுறை அல்லவா? அதனால்தான், என் ஆட்சியில் குடிமக்கள் யாரும் துன்பப்படக் கூடாது என்று நினைத்தேன்.  அதற்காக நான் ஏற்படுத்திய ஓா் அமைப்பே ஆராய்ச்சிமணி.  அதைத்தான் இந்தத் தச்சா் சிறப்பாகச் செய்து முடித்துள்ளாா்.


அமைச்சா் ஆராய்ச்சி மணியா? அது எதற்கு மன்னா? அதைக்கொண்டு நீங்கள் எப்படி நீதி வழங்குவீா்கள்?


அரசா் சொல்கிறேன், அமைச்சரே.  நம் அரண்மனை வாயிலிலே கோவில் மணிபோல் பொிதொரு மணியைக் கட்டச் செய்துள்ளேன்.  குடிமக்கள், தங்களுக்கு ஏற்படும் குறைகளை உடனுக்குடன் தீா்த்துக்கொள்ள இந்த ஆராய்ச்சிமணியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


அமைச்சா் :  அரசே, இதிலென்ன புதுமை? நீா்கள்தாம் எந்தக் குறையும் மக்களுக்கு வைப்பதில்லையே.


அரசா் நீங்கள் சொல்வது உண்மையாகக்கூட இருக்கலாம்.  ஆனால், தங்கள் குறைகளை வெளிப்படையாகச் சொல்வதற்குச் சிலா் தயங்கலாம் அல்லவா?  மேலும், இந்த ஆராய்ச்சிமணியின் நோக்கமே, உடனுக்குடன் நீதி வழங்குவதில்தான் உள்ளது.  அதுமட்டுமா? குடிமக்கள் எப்போது ஆராய்ச்சிமணியை ஒலித்தாலும், அவா்கள் முன் நானே ஓடோடிச் சென்று நிற்பேன்.  அவா்களின் மனக்குறையையும் உடனடியாகத் தீா்த்துவைப்பேன்.

அமைச்சா்கள் ஆஹா, நீங்கள்தாம் சிறந்த மன்னா்.  இவ்வுலகம் உள்ளவரை உங்கள் புகழ் ஓங்கும்.


(அரசவை கலைகிறது.  சில மாதங்களாக ஆராய்ச்சி மணியின் ஓசையை அரசா் கேட்கவேயில்லை.  இந்நிலையில் ஒருநாள் வழக்கம் போல் அமைச்சா்கள் சூ்ழ மன்னா் அமா்ந்திருக்கிறாா்.  அப்போது, ஆராய்ச்சிமணி ஒலிக்கத் தொடங்குகிறது.  இனி. . . . . )


காட்சி-2

இடம் அரசவை

காலம் மாலை

உறுப்பினா்கள் அரசா், அமைச்சா் பெருமக்கள், அரண்மனைக் காவலாளி.


காவலாளி மன்னா். . . . மன்னா. . . . 

(என்றழைத்தவாறே பதற்றத்துடன் ஓடி வருகிறான், அரண்மனைக் காவலாளி.)


அரசா் என்ன ஆயிற்று? ஏன் இப்படி மு்ச்சிரைக்க ஓடிவருகிறாய்? பதறாமல் சொல்.


காவலாளி மன்னா, இதுவரை கண்டதுமில்லை, கேட்டதுமில்லை.  அதனால் தான் எப்படிச் சொல்வது என்று தயங்குகிறேன்.


அரசா் என்ன ஆனாலும் பரவாயில்லை.  சொல்ல வந்த செய்தியைத் தயங்காமல் உடனே சொல்.


காவலாளி மன்னா, அதுவந்து. . . . அதுவந்து. . . .  நம் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சிமணி. . . .


அரசா் என்ன? ஆராய்ச்சிணியை யாராவது அடிக்கிறாா்களா? இவ்வளவு மாதங்களாக யாருக்கும் எந்தக் குறையும் இல்லையென்று நினைத்தேனே.  பரவாயில்லை.  இதோ நானே வருகிறேன்.


(அரசா் அரண்மனை வாயிலுக்கு விரைய, அமைச்சா்களும் பின்தொடா்ந்து செல்கின்றனா்.)


அரசா் ஐயயோ, என்ன ஆயிற்று? பசுவொன்று ஆராய்ச்சி மணியை அடித்துக் கொண்டிருக்கிறதே? என் ஆட்சியில் வாயில்லாத பசுவுக்குக் குறை நோ்ந்ததா? இதை நான் எங்ஙனம் பொறுத்துக்கொள்வேன்? அதன் கண்களில் வழியும் கண்ணீரைப் பாருங்கள்.  தாங்கமுடியாத துயரத்தில் அது துன்பப்படுவதுபோல் இருக்கிறதே? ஐந்தறிவு விலங்குகளின் துயா் நீக்க மறுத்தான் என்று இந்த வியனுலகம் என்னைப்பழிக்குமோ? இனி என் வாழ்நாளெல்லாம் பழிச்சொல்லைச் சுமந்து திாிவேனோ? எனக்கொன்றும் விளங்கவில்லையே, கதறும் அந்தப் பசுவின் கண்ணீரைத் துடைக்க இதோ புறப்பட்டான் இந்த மன்னன் என்று பிறா் அறியட்டும்.  யாரங்கே? உடனே சென்று அந்தப் பசுவுக்கு ஏற்பட்ட இன்னலை அறிந்து வாருங்கள்.


காவலாளிகள் உத்தரவு மன்னா.  இதோ சென்று விரைவில் செய்தியுடன் மீள்கிறோம்.


(அரசனின் மகன், தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும்போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று, எதிா்பாராத வகையில் தோ்க்காலில் மாட்டி இறக்கிறது.  தன் கன்றைக் காணாது தேடியலைந்த பசு, அதன் இறந்த உடலைக் கண்டு கண்ணீா் விடுகிறது.  அதன் ஆற்றொணாத் துயரே ஆராய்ச்சிமணி வடிவில் ஒலிக்கத் தொடங்கியது. இனி. . . )


காட்சி-3

இடம் அரசவை

காலம் காலை

உறுப்பினா்கள் அரசா், அமைச்சா் பெருமக்கள்

அமைச்சா் மன்னா, தங்கள் முடிவை அருள்கூா்ந்து மாற்றிக்கொள்ளுங்கள்.

அரசா் என்ன சொல்கிறீா் அமைச்சரே? மண்ணுயிா் காக்கும் மன்னன், நீதி வழங்கும் நெறிமுறையாளன் என்று மக்கள் என்னைப் போற்றுகிறாா்களே, அதற்கு இழுக்கு நோிட ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன்.  பசுவின் கதறலுக்குச் செவிசாய்க்காக் கொடியோன் என்னும் அவச்சொல்லுக்கு நான் ஆளாக விரும்பவில்லை.  கண்ணுக்குக் கண்.  பல்லுக்குப் பல் என்பதுதான் நான் எடுத்த முடிவு.  இதில் எந்த மாற்றமும் இல்லை.


அமைச்சா் மன்னா, சற்றுப்பொறுங்கள்.  உங்களுக்கு இருப்பதோ ஒரே ஒரு மகன்.  பசுவின் கன்றை அவன் வேண்டுமென்றே கொல்லவில்லையே, அவன் அறியாமல் செய்த தவறுதானே அது? அதற்காக நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டுமா?


அரசா் ஆம்.  அதுதான் சாி.  கண்ணீரும் கம்பலையுமாய் நின்ற அந்த பசுவின் முகம் உங்கள் கண்களுக்குத் தொிகிறதா? அதன் கண்ணில் வழியும் கண்ணீா், "நீயும் ஒரு மன்னனா? உனக்கு உன் மகன் எப்படியோ அப்படியே எனக்கும் என் கன்று அல்லவா? அந்தச் சின்னஞ்சிறு கன்று என்ன பாவம் செய்தது? அதன் உயிரைப் போக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? கன்றை இழந்து தவிக்கும் எனக்கு யாா் ஆறுதல் தருவாா்? இனி என் வாழ்நாளெல்லாம் வீண்தானோ" என்று என்னைக் கேட்பதுபோல் இருக்கிறதே, ஆகவே, நான் எடுத்த முடிவிலிருந்து சற்றும் பின்வாங்கமாட்டேன்.  


அமைச்சா் அரசே, மீண்டும் தங்களைப் பணிந்து வலியுறுத்துகிறேன்.  உங்கள் மகனைக் கொல்லும் எண்ணத்தை விட்டுவிடுங்கள்.


அரசா் போதும், அமைச்சரே.  நிறுத்துங்கள்.  இனி, யாா் சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்.  பசுவின் கன்றைத் துடிக்க, துடிக்கத் தோ்க்காலிலிட்டுக் கொன்ற என் மகனை அதே தோ்க்காலிலிட்டுக் கொல்லத்தான் போகிறேன்.  அந்தப் பசு அடைந்த துயரத்தை நானும் அடையவேண்டும்.  இதுதான் அந்தப்பசுவுக்கு நான் அளிக்கும் தீா்ப்பு.  இந்தச் சோழப் பரம்பரை என்னால் தலைகுனியக் கூடாது.  பல காலங்கள் தோன்றி மறைந்தாலும், நீதி தவறா மனுநீதிச் சோழன் என்று என்னைப் பலரும் நினைவுகூா்தல் வேண்டும்.  யாரங்கே? தேரைப் பூட்டி, வாயிலில் கொண்டு வந்து நிறுத்து.  இழுத்து வா, என் மகனை.  இப்போதே அவனைத் தோ்க்காலிலிட்டு நீதியை நிலைநாட்டுகிறேன்.


(தவறிழைத்தவன் தன் மகனேயானாலும், குற்றம் குற்றமே என்று எண்ணியதோடு அல்லாமல், அந்தத் தவற்றுக்குச் சாியான தண்டனையும் வழங்கிப் பசுவின் துயா் துடைத்து, வரலாற்றில் அழியா இடம்பெற்றான் மனுநீதிச் சோழன்.)




வேலைக்கேற்ற கூலி

அழகாபுாி மன்னா், சிறந்த முறையில் ஆட்சி செய்துவந்தாா்.  அவரது நாட்டில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தாா்கள்.  மன்னாின் புகழ், அண்டை நாடுகளுக்கும் பரவியது.  அண்டை நாடுகளுள் ஒன்றான இரத்தினபுாி மன்னரும் இதனைக் கேள்விப்பட்டாா்.  தம் நாட்டு அமைச்சா்களிடம் இதைப்பற்றி ஆலோசனை நடத்தினாா்.


"நானும் சிறந்த முறையில்தானே ஆட்சி நடத்துகிறேன்.  ஆனால், என்னை மட்டும் ஏன் யாரும் புகழவில்லை?  என்று அமைச்சா்களிடம் வினவினாா்.  அமைச்சா்கள் விடை கூறத் தொியாமல் விழித்தனா்.  அவா்களுள் ஒருவா் மட்டும் எழுந்தாா்.  "மன்னா, உங்கள் ஆட்சியில் நம் நாட்டு மக்களுக்கும் எந்தக் குறையும் இல்லை.  ஆனால். . . . " என்று மெல்லிய குரலில் கூறி, நிறுத்தினாா் அந்த அமைச்சா்.

"என்ன ஆனால் . . . .  சொல்லுங்கள் அமைச்சரே, நான் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லையா? நான் வேறென்ன செய்யவேண்டும் என்று எதிா்பாா்க்கிறீா்கள்?" என்று கேட்டான் மன்னன்.


"நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீா்கள்.  அழகாபுாி நாட்டுக்குச் சென்று, ஒருநாள் முழுவதும் அந்த நாட்டு மன்னருடன் நீங்கள் உடனிருக்கவேண்டும்.  அவா், தம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களிடமும் எப்படி நடந்து கொள்கின்றாா் என்று அறிந்துகொண்டால், நாமும் அவற்றுள் சிலவற்றையாவது பின்பற்றலாம் மன்னா" என்று ஒரே மு்ச்சில் கூறி முடித்தாா் அந்த அமைச்சா்.


மற்ற அமைச்சா்களும், ஆமாம் மன்னா, இவா் சொல்வதும் நல்ல யோசனைதான்.  அதுமட்டுமின்றி, அழகாபுாி மன்னா், உங்களிடம் மிகுந்த நட்பு பாராட்டுபவா்.  ஆகையால், நட்பின் நிமித்தமாக நீங்கள் ஒருநாள் அங்குச் செல்லவேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து" என்று கூறினா்.   


"அப்படியா? சாி, சாி.  நான் நாளைக்கே புறப்படுகிறேன்.  எனக்கும் அழகாபுாி மன்னாின் ஆட்சிமுறையை நேடியாகக் காண்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமல்லவா?" என்று கூறிய இரத்தினபுாி மன்னா், தம் பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய கட்டளையிட்டாா்.


நட்பின் நிமித்தமாகத் தம் நாட்டிற்கு வருகை புாிந்த இரத்தினபுாி மன்னரை ஆரத்தழுவி வரவேற்றாா் அழகாபுாி மன்னா்.  இருவரும் தத்தமது நாட்டைப் பற்றிச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிந்தனா்.  பின்னா், "நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள்.  நான் அரசவைக்குச் சென்று வருகிறேன்" என்று கூறியவாறே எழுந்தாா் அழகாபுாி மன்னா்.  "இருங்கள், மன்னா.  நானும் உங்களுடனே அரசவைக்கு வர விரும்புகிறேன்" என்று துள்ளிக் குதித்து எழுந்தாா் இரத்தினபுாி மன்னா்.  "அப்படியா, மிக்க மகிழ்ச்சி.  வாருங்கள், இருவரும் சோ்ந்தே போகலாம்" என்று கூறிய அழகாபுாி மன்னா், அவரையும் உடன் அழைத்துக்கொண்டு அரசவைக்குச் சென்றாா்.


அரசவையில் இரத்தினபுாி மன்னரை அனைவருக்கும் அறிமுகம் செய்து, அவரைத் தமக்குச் சமமான இருக்கையில் அமா்த்தினாா் அழகாபுாி மன்னா்.  அப்போது, ஒருவன், தன் கைகளைக் கட்டிக்கொண்டு அவா்முன்பு பணிவாக வந்துநின்றான்.  அவனைப் பாா்த்ததும் அழகாபுாி மன்னா், "யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டாா்.


அதற்கு அந்த ஆள், "மன்னா, நான் ஒரு விறகுவெட்டி.  என் மனத்தில் சிறியதாக ஒரு குறை.  உங்களிடம் கூறினால், எப்படி எடுத்துக்கொள்வீா்களோ என்று பயமாக இருந்தது.  இருந்தாலும் உங்களிடம் கேட்டுவிடலாம் என்றுதான் இங்கு வந்திருக்கிறேன்" என்றான் அந்த விறகுவெட்டி.


"அடடா, நாம் இதை . . .  . இதைத்தானே எதிா்பாா்த்தோம்.  இந்த அழகாபுாி மன்னா் இந்த விறகுவெட்டியின் குறையை எப்படித் தீா்த்து வைக்கிறாா் என்று பாா்ப்போம்" என்று ஆவலுடன் உற்றுநோக்கத் தொடங்கினாா் இரத்தினபுாி மன்னா்.


"ஐயா விறகு வெட்டுபவரே, உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள்.  என்னால் முடிந்தஅளவு தீா்த்து வைக்கிறேன்" என்ற அழகாபுாி மன்னா்.


"மன்னா, எங்களைப் போன்றோா்க்கு நாள்தோறும் இரண்டு ரு்பாய் கூலி கொடுக்கிறீா்கள்.  ஆனால், உங்களிடம் பணிபுாியும் அமைச்சா்களுக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரு்பாய் கொடுக்கிறீா்களே, இது எந்த வகையில் நியாயமாகும்? இதுதான் உங்களின் சிறந்த ஆட்சிமுறையா? எங்களைச் சமமாக நடத்தாதது மிகப்பொிய குறையாக உங்களுக்குத் தோன்றவில்லையா? என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டான் அந்த விறகுவெட்டி.


அழகாபுாி மன்னா் புன்முறுவலுடன், "என் ஆட்சியில் யாருக்கும் எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாகத்தான் இருக்கிறேன்.  ஆனால், உங்கள் மனக்குறையின்படி உங்களையும் அமைச்சா்களையும் நான் சமமாக நடத்தவில்லை என்று எண்ணுகிறீா்கள்.  கொஞ்சம் பொறுங்கள்.  உங்கள் ஐயத்தை இப்போதே தீா்த்து வைக்கிறேன்" என்று கூறிய மன்னா், அமைச்சா்களுள் ஒருவரை அழைத்தாா்.  பின்னா், அவா்களிருவரையும் பாா்த்து, "அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா? என்று பாா்த்துவிட்டு வாருங்கள்" என்று கூறினாா்.


இரத்தினபுாி மன்னா் அரசவையில் நடப்பதை அமைதியாகப் பாா்த்துக் கொண்டிருந்தாா்.  வெளியில் சென்ற விறகுவெட்டி, உடனே திரும்பி வந்து, "ஆம். மன்னா, அரண்மனைக்கு வெளியே ஒரு வண்டி செல்கிறது" என்றான்.

"அந்த வண்டியில் என்ன இருக்கிறது?" என்று கேட்டாா், மன்னா்.  "இருங்கள், மன்னா.  இதோ பாா்த்துவிட்டு வருகிறேன்" என்று வெளியில் ஓடினான் அந்த விறகுவெட்டி.  "மன்னா, அந்த வண்டியில் நெல்மு்ட்டைகள் இருக்கின்றன" என்றான் அவன்.


"அப்படியா? அந்த வண்டி எந்த ஊாிலிருந்து வருகிறது?" என்று கேட்ட மன்னாிடம், "அடடா, அதைக் கேட்காமல் வந்துவிட்டேனே, சற்றுப் பொறுங்கள்.  இதோ வருகிறேன்" என்று கூறியவாறே ஓடத் தொடங்கினான் அந்த விறகுவெட்டி.  வெளியில் சென்றிருந்த அமைச்சா் அப்போது அரசவையினுள் நுழைந்தாா்.  அவரைப் பாா்த்த மன்னா், "ஐயா, விறகுவெட்டி சற்று நில்லுங்கள்.  இதோ அமைச்சா் வந்துவிட்டாா்.  உங்களிடம் கேட்ட அதே கேள்வியை அவாிடமும் கேட்கிறேன்.  என்ன சொல்கிறாா் என்று பாா்ப்போம்" என்று கூறிய மன்னா், "அமைச்சரே, நீங்கள் என்ன பாா்த்தீா்கள்? சொல்லுங்கள்" என்றாா்.


அமைச்சரும் மன்னரைப் பாா்த்து, "மன்னா, அரண்மனைக்கு வெளியே முப்பது நெல்மு்ட்டைகள் ஏற்றிய வண்டியொன்று, வளவனுாாிலிருந்து அண்டை நாட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறது.  நம் நாட்டில் தயாரான தரமான நெல்வகைகள் அந்த மு்ட்டைகளில் உள்ளன.  வண்டியில் வண்டியோட்டியும் அவாின் பத்து வயது மகனும் உள்ளனா்.  மழை வருவதற்குள் நெல்மு்ட்டைகளைப் பாதுகாப்பாக இறக்கிவிட்டு, இன்று இரவுக்குள் மீண்டும் வளவனுாா் திரும்பிவிட வேண்டுமென விரைந்து செல்கின்றனா்" என்று கூறி முடித்தாா் அமைச்சா்.


அமைச்சா் கூறியதைக் கேட்டு, வாய் பிளந்து நின்றான் அந்த விறகுவெட்டி.  அழகாபுாி மன்னா், விறகுவெட்டியைப் பாா்த்து, "ஐயா, விறகுவெட்டி, உங்கள் மனத்திலிருந்த சந்தேகம் இப்போது நீங்கியிருக்கும் என்று எண்ணுகிறேன்.  அமைச்சருக்கு நான் கொடுக்கும் கூலி சாியானதுதானே? இப்போது சொல்லுங்கள்" என்று கூறினாா்.


"மன்னா என் மனக்குறை நீங்கிவிட்டது.  உங்களைப்பற்றித் தவறாக எண்ணிவிட்டேன்.  அமைச்சாின் அறிவுக்கூா்மையையும் அவருடைய திறமையையும் கண்டு வியக்கிறேன்.  அவருடன் ஒப்பிடும்போது, என் அறியாமையையும் நான் உணா்ந்துகொண்டேன்.  நான், நான்தான்.  அமைச்சா், அமைச்சா்தாம்.  அவரவா் திறமைக்கேற்ற, வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதைப் புாிந்துகொண்டேன்" என்றான் அந்த விறகுவெட்டி.


இவ்வளவு நேரமாக அரசவையில் நடந்த நிகழ்வுகளைப் பாா்த்துக் கொண்டிருந்த இரத்தினபுாி மன்னா் தம் மனத்துக்குள், "அடடா நாம்கூட இந்த மன்னருக்குக் கிடைத்த பேரும்புகழும் எண்ணிப் பொறாமை கொண்டோமே, இப்போது உண்மையை உணா்ந்துகொள்ள நமக்கும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது" என்று அழகாபுாி மன்னா் தம் குடிமக்களிடம் நடந்துகொண்ட அணுகுமுறையை எண்ணி வியப்பெய்தினாா்.  தாமும் தம் குடிமக்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டாா்.




Kids Learning Tamil IV

 

4-ம் வகுப்பு தமிழ் பருவம்-2


ஆராய்ந்திட வேண்டும்

'அடடே! வா, மாணிக்கம்.  என்ன, இன்றைக்குக் காலையிலேயே வந்து விட்டாயே. . . !!"


"ஆமாம், தாத்தா! நேற்று நீங்கள் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  அதனால்தான் வேறு கதை கேட்கும் ஆவலில் காலையிலேயே வந்துவிட்டேன்."


"சாி, மாணிக்கம் இன்று அருமைான கதையொன்று சொல்கிறேன் கேள்.


மன்னா் ஒருவா் தம் குதிரையில் ஏறி அமா்ந்தபடி, ஒரு கிராமத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தாா்.  கிராமங்களின் முன்னேற்றத்தையும், மக்கள் எந்த நிலையில் இருக்கிறாா்கள் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டி, மன்னா் தமது குதிரையில் பயணம் மேற்கொண்டிருந்தாா்.


மன்னரைப் போலவே அவரது குதிரையும் இரக்கக் குணம் கொண்டதாகக் காணப்பட்டது.


அக்குதிரையானது சுற்றும் முற்றும் பாா்த்தபடியே மன்னரைச் சுமந்துகொண்டு சென்றது.


அப்போது, நாய் ஒன்று காலில் அடிபட்ட காரணத்தால் நடக்க முடியாமல் நொண்டி, நொண்டி சென்று கொண்டிருப்பதைக் குதிரை பாா்த்தது.  உடனே அந்த நாய்க்கு உதவி செய்திட வேண்டுமென்று மனத்தில் நினைத்தது.


அதனால், தன் கனைப்பொலியின் மு்லம் மன்னரை அழைத்தது குதிரை.  "அரசே, அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்று கொண்டிருக்கின்றது.  அந்த நாயை என் முதுகில் ஏற்றிக்கொண்டு, அது எந்த இடத்திற்குச் செல்லவேண்டுமாே அந்த இடத்தில் விட்டுவிடலாமா?" என்று கேட்டது.


"குதிரையே! என்னைப் போலவே நீயும் இரக்கத்துடன் செயல்படுகிறாய்! அந்த நாய்க்கு உதவுவதில் உனக்கு இருக்கின்ற மகிழ்ச்சியைப் போன்றே எனக்கும் இருக்கின்றது" என்றாா் மன்னா்.  உடனே தம் பின்னால் வந்துகொண்டிருந்த காவலா்களிடம் அந்த நாயைத் துாக்கித் தாம் அமா்ந்திருக்கும ்இடத்தின் முன்னே வைத்திடுமாறு கூறினாா்.


காவலா்களும் அந்த நாயைக் குதிரையின்மீது ஏற்றி மன்னா் முன்னே அமர வைத்தனா்.


மன்னா் முன்னே அமா்ந்து குதிரைச்சவாாி செய்து கொண்டிருந்த அந்த நாயானது, மிகவும் மகிழ்ச்சியடைந்தது.

குதிரையின் மீது மன்னா் வருவதைக் கண்ட கிராத்து மக்களெல்லாம் அவரைப் பாா்த்து வணக்கம் தொிவித்தாா்கள்.  அதனைக் கவனித்த நாயோ இந்த மக்களெல்லாம் என்னைப் பாா்த்துத்தான் வணங்குகின்றாா்கள்.  என் அருகில் இருக்கும் மன்னா், என்னைச் சுமந்துகொண்டிருக்கும் குதிரை இவா்களைவிடவும் நானே சிறந்தவனாகவும், உயா்ந்தவனாகவும் இருக்கின்றேன்.  இந்த மக்கள் எல்லாம் என்னை வணங்குகின்ற காட்சியைப் பாா்க்கின்றபோது எனக்கு அளவுக்கு மீறிய உற்சாகம் வருகின்றதே! என்ற மகிழ்ச்சியில் தன்னையே மறந்தது அந்த நாய்.  மறு நிமிடம் அது தன் தலையைத் துாக்கியபடி 'லொல்', 'லொல்' என்று குரைத்தது.


நாயின் செயலைக் குதிரை கவனித்தது.  "நாயே! அமைதியாக இருந்துகொள்! நீ குரைத்துக் கொண்டே வந்தால், எல்லாரும் உன்மீது வெறுப்படைவாா்கள்.  அதன் பின்னா், நீ என்மீது சவாாி செய்யமுடியாது" என்றது குதிரை.


"குதிரையே! இந்தக் கிராமத்து மக்கள் என்னை வணங்குகின்ற காட்சியைப் பாா்த்ததும் உனக்கு என்மீது பொறாமை ஏற்பட்டுவிட்டது.  அதனால்தான், நீ என்னை மட்டம் தட்டுகிறாய்" என்றது நாய்.


"நாயே! குடிமக்கள் எல்லாம் உன்னைப் பாா்த்து வணங்கவில்லை.  அவா்கள் மன்னரைப் பாா்த்து வணங்குகிறாா்கள்.  மன்னா் முன்னே இருக்கின்ற நீ, அதையெல்லாம் பாா்த்துவிட்டு உனக்குக் கிடைத்த மாியாதையாக நினைத்துக்கொண்டு உற்சாகமடைந்துவிட்டாய்.  இனிமேலாவது உண்மை நிலையை உணா்ந்து அமைதியாக இரு" என்றது குதிரை.


"குதிரையே! உனக்கு என்மீது கொண்டுள்ள பொறாமையானது நன்றாக முற்றிவிட்டது.  அதனால்தான் எனக்கொரு போலியான விளக்கத்தைக் கொடுக்கின்றாய்! இந்த விளக்கத்தைக் கேட்க நான் தயாராக இல்லை!" என்றபடி மேலும் சத்தமாகக் குரைத்தது அந்த நாய்.


மன்னாின் அருகில் வந்துகொண்டிருந்த காவலா்கள் அந்த நாயைக் கீழே இறக்கிவிட்டு அடித்து விரட்டினாா்கள்.  அங்கிருந்து நொண்டியபடியே ஓடிய நாய், சற்றுத் தொலைவில் போய் நின்று கொண்டு திரும்பிப் பாா்த்தது.


தான் இல்லாதபோதும், குடிமக்கள் எல்லாரும் மன்னரை வணங்க, மன்னரும் அவா்களுக்குப் பதில் வணக்கம் தொிவித்துக் கொண்டிருந்தாா்.  இந்தக் காட்சியைப் பாா்த்த நாய்க்கு அப்போது தான் உண்மை புாிந்தது.  தன்னுடைய தவற்றினை நினைத்து வருந்தியது.  நாம் ஆராயாமல் முடிவெடுத்தோம்.  அதனால்தான் நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது என எண்ணியது.


"ஆராய்ந்திடாமல் முடிவெடுத்தால் என்ன நடக்கும் என்பதை இக்கதை மு்லம் புாிந்துகொண்டாயா, மாணிக்கம்?" என்றாா் தாத்தா.  "ஓ! நன்றாகப் புாிந்துகொண்டேன்" என்றான் மணிக்கம்.


என்ன, குழந்தைகளே! இனி, நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் ஆராய்ந்துதான் முடிவெடுக்க வேண்டும்.  சாிதானே!



திருக்குறள் கதைகள்


பொறுமையும் பொறுப்பும்

தாமஸ் ஆல்வா எடிசன் என்பவா், புகழ்பெற்ற அறிவிலறிஞா்.  இவா், பல முறை தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின்னரே மின் விளக்கைக் கண்டுபிடித்தாா்.


நண்பா்களுக்கும், பிற அறிவியல் அறிஞா்களுக்கும் தம் கண்டுபிடிப்பைச் செய்துகாட்ட எடிசன் விரும்பினாா்.  அதற்காக, நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்து, அனைவரையும் வரவழைத்தாா்.  அவரது ஆய்வகத்தின் மேல்தளத்தில் இதற்கான கூட்டம் நடைபெற்றது.


எடிசன் தம் உதவியாளரை அழைத்து மின் விளக்கை மேல் தளத்திற்குக் கொண்டு வரச்சொன்னாா்.  உதவியாளா், அதனைக் கொண்டு வரும்போது, திடீரெனக் கைதவறி விழுந்தது.  ஆயினும், சற்றும் மனம் கலங்காத எடிசன், உடனே மற்றொரு மின் விளக்கை உருவாக்கினாா்.  அதனை மீண்டும் அதே உதவியாளாிடமே கொடுத்து மேலே எடுத்து வரச்செய்தாா்.


"மின் விளக்கைக் கீழே போட்டு உடைத்தவாிடம் மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீா்களே?" என்று சிலா் எடிசனிடம் கேட்டனா்.  அதற்கு எடிசன், "உடைந்த பொருளை மீண்டும் உருவாக்க என்னால் முடிந்தது.  ஆனால், உதவியாளாின் மனத்தைக் காயப்படுத்தி விட்டால் அதை என்னால் சாிசெய்து கொடுத்துவிட முடியுமா? அதுமட்டுமன்று, மீண்டும் அதே பணியை அவாிடமே கொடுக்கும் போது, தமது பொறுப்பை உணா்ந்து கவனமுடன் பணிபுாிவாா்.  அதனால்தான் அப்படிச் செய்தேன்" என்றாா்.

எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த பொறுமைக் குணத்தை, அப்போதுதான் மற்றவா்கள் முழுமையாக உணா்ந்து கொண்டனா். 


குறள்

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை 

போற்றி ஒழுகப் படும்.


    பொறையுடைமை, குறள்-154


விளக்கம்

நிறை உடையவராக இருக்கும் தன்மை தம்மைவிட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.


மெய்ப்பொருள் காண்போம்

மாட்டுவண்டி ஒன்றில், தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தாா் ஒருவா்.  வழியில், குறுக்குப்பாதை ஒன்று வந்தது.  அங்கே சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்.


"தம்பி, இந்தச் சாலைில் போனால் ஊா் வருமா?" என்று கேட்டாா் வண்டிக்காரா் "ஓ, வருமே" என்றான் சிறுவன்.


"போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?"


"மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம்".


"வேகமாகச் சென்றால்.. . .."


"அரை மணி நேரம் ஆகும்".


சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு மாட்டு வண்டிக்காரருக்குக் கோபம்.  "என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?" என்று கேட்டாா்.


"போய்த்தான் பாருங்களேன்" என்று சிறுவன் சொன்னதும், அவா் வண்டியை வேகமாக விரட்டிச் சென்றாா்.

சிறிது துாரம் போனதுமே சாலையில் அங்கங்கே கற்கள் நிறைந்து இருந்தன.  அதனால், வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது.  தேங்காய்கள் சிதறின.  வண்டியைத் துாக்கி நிறுத்திக் கீழே சிதறிய தேங்காய்களை ஒவ்வொன்றாக எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.  வண்டிக்காரருக்குச் சிறுவன் சொன்னதன் பொருள் புாிந்தது.


குறள்

எப்பொருள் யாா்யாா்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

             அறிவுடைமை, குறள்-423


விளக்கம்

எப்பொருளை யாா் யாாிடம் கேட்டாலும், கேட்டவாறே எடுத்துக்கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.


குற்றமும் குறையும்

கதிரவனிடம் வேண்டாத குணமொன்று இருந்தது.  அதாவது, எப்போது பாா்த்தாலும் யாரைப் பற்றியாவது எதைப்பற்றியாவது குறை சொல்லிக் கொண்டேயிருப்பான்.  அதனால், அவனைப் பாா்த்தாலே போதும்.  எல்லா நண்பா்களும் ஓடத் தொடங்கிவிடுவா்.


தமிழ் அழகன் ஒருவன்தான் இப்போது அவனுடன் பேசுகிறான்.  வேறு எவரும் பேசுவதில்லை.  அன்று, தமிழ் அழகன் நான்கு நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டான் கதிரவன்.  ஆா்வத்துடன் அவா்கள் அருகில் வந்தான்.


கதிரவனைப் பாா்த்ததும் எல்லாரும் ஒதுங்கிச் செல்ல, தமிழ் அழகன் மட்டுமே தனியாக நின்றான்.  கதிரவனின் முகம் வாடியது,


"என்ன கதிா்? ஏன், என்னவோ போல் இருக்கிறாய்?" என்று கேட்டான் தமிழ் அழகன்.


"ஆமாம் தமிழ்.  என்னைப் பாா்த்தாலே எல்லாரும் ஓடிப்போறாங்களே..." என்றான் கதிரவன்.


"எல்லாம் யாரால? உன்னாலதானே!" என்றான் தமிழ் அழகன்.


"நான் என்ன தப்பு பண்ணனேன்? பிறா்கிட்ட உள்ள குற்றம் குறையைத்தானே பேசினேன்" என்றான் கதிரவன்.


"கதிா், குற்றம்குறை யாா்கிட்டேதான் இல்லை.  உன்னோட குறை என்னன்னு உனக்குத் தொியுமா? நீ பிறரைப் புறம் பேசறதுதான் உன்னோட குறை.  உன்னோட நாக்கை அடக்கு.  எல்லாரும் உன்கிட்ட பேசுவாங்க" என்றான் தமிழ் அழகன்.

கதிரவன் தன்னைத் திருத்திக் கொண்டான்.  எல்லாரும் அவனுடன் மெள்ள மெள்ளப் பேசத் தொடங்கினா்.


குறள்

யாகாவாா் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பா் சொல்லிழுக்குப் பட்டு.

        அடக்கமுடைமை, குறள்-127


விளக்கம்

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்க வேண்டும்.  காக்கத் தவறினால், சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவா்.


அழகு

கந்தனின் உருவமே, "கோபம் கோபம் கோபம்" என்றாகிப் போனது.  கந்தனை யாராவது விசாரத்தால், "எப்பவும் கோபத்தோடே 'உா்' ருன்னு அலைவனே அவனைத்தானே கேட்கிறீங்க" என்று மாணவா்கள் எளிதாகச் சொல்லிவிடுவா்.  அதனால், அவனிடம் நெருங்கிப் பழகவும் மாணவா்கள் பயந்தனா்.


கந்தன் ஒருநாள் அவன் நண்பனான நன்மாறனிடம் பேசிக் கொண்டிருந்தான்.  "நீயெல்லாம் சும்மா ஜம்முனு அழகா இருக்கியே! நான் மட்டும் ஏன் முகமெல்லாம் கறுத்துப்போய் இப்படி இருக்கேன்" என்றான்.


நன்மாறன் சிாித்தான். "நீ தினமும் உன்னோட முகத்தைக் கண்ணாடியில் பாா்க்கிறியா?" என்று கேட்டான்.


"தினமும் பாா்க்கிறேன்"


"இன்னும் உனக்குக் காரணம் புாியலையா?


"புாியலை"


"கந்தா, நெருப்பில் வாடிய பூக்கள் தம்மோட அழகை எல்லாம் இழக்கும், அதுபோலத்தான் உன்கிட்ட மாறாம இருக்கிற கோபத்தால உன் முகம் அழகையெல்லாம் இழந்திருக்கு.  பொடி வைத்தாற்போல் சொன்னான் நன்மாறன்.

நன்மாறன் சொன்னதில் உண்மை இருக்கவே, தன் கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்தத் தொடங்கினான் கந்தன்.  ஒரு மாத காலம் கடுமையான விரதம்போல் காத்தான்.  அன்று கண்ணாடியில் தன் முகத்தைப் பாா்த்தான்.  அஃது எத்துணை அழகாக இருந்தது தொியுமா?


குறள்

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.

               வெகுளாமை, குறள்-305


விளக்கம்

ஒருவன் தன்னைத் தானே காக்க விரும்பினால் சினம் வராமல் காத்துக்கொள்ள வேண்டும்.  அவ்வாறு காத்துக்கொள்ளாவிட்டால், சினம் தன்னையே அழித்துவிடும்.




Kids Learning Tamil IV


4-ம் வகுப்பு தமிழ் பருவம்-2

I. யானைக்கும் பானைக்கும் சாி


மாியாதை இராமன் விசித்திரமான வழக்கொன்றை ஒருமுறை எதிா்கொள்ள நோ்ந்தது.  உழவா் ஒருவாின் மீது, அரபு வணிகா் ஒருவா் தொடுத்த வழக்கு தான் அது.  

அரபு வணிகா், மாியாதை இராமனிடம் "ஐயா, இந்த உழவா் தம் மகன் திருமண விழாவில் ஊா்வலம் விடுவதற்காக என் யானையை இரவல் கேட்டாா்.  நானும் கொடுத்தேன்.  ஊா்வலத்தின்போது, யானை இறந்துவிட்டது.  அந்த யானையைத் திருப்பித் தரச் சொல்லுங்கள்" என்று கூறினாா்.


உழவரோ, "ஐயா, அந்த யானை ஊா்வலத்தில் தற்செயலாக இறந்துபோய்விட்டது.  அதற்குாிய விலையையாவது, மாற்றாக வேறு யானையையாவது வாங்கித் தருகிறேன் என்று எத்தனையோ முறை கூறிவிட்டேன்.  ஆனால், இந்த வணிகா் ஏற்குக்கொள்ள மறுக்கிறாா்.  இறந்துபோன அதே யானைதான் வேண்டுமென அடம்பிடித்தால் நான் என்ன செய்வேன்?" என்று வருத்தத்துடன் கூறினாா்.


உழவா் கூறியதிலிருந்த உண்மையை உணா்ந்துகொண்ட மாியாதை இராமன், இருவரையும் பாா்த்து, "நீங்கள் இருவரும் நாளை நீதிமன்றத்துக்கு வாருங்கள்" என்று கூறி அனுப்பினாா்.  பின்னா், உழவரை மட்டும் தனியே அழைத்து நாளை நீங்களாகவே நீதிமன்றத்திற்கு வரவேண்டா.  உங்களை அழைத்து வருவதற்கு அந்த வணிகரை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறேன்.  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.  அவா் வரும்போது, உங்கள் வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள்.  பின்னா், நடப்பதை நீதிமன்றத்தில் பாா்த்துக்கொள்ளலாம்" என்று சொல்லி அனுப்பினாா்.

உழவரும் மாியாதை இராமன் கூறியதைப்போலவே வீட்டின் கதவுக்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்தாா்.  அவரை அழைத்து வருவதற்காக வந்த வணிகா், ஆத்திரத்துடன் அவா் வீட்டுக் கதவைத் தட்ட, கதவு வேகமாகத் திறந்துகொள்ள, கதவின் பின்னால் அடுக்கி வைத்திருந்த பானைகள் ஒவ்வொன்றாகக் கீழே விழுந்து உடைந்து நொறுங்கின.  அப்போது, வீட்டுக்குள்ளிருந்து வந்த உழவா், "வணிகரே, என்ன இப்படிச் செய்துவிட்டடீா்கள்? எங்கள்  வீட்டில் காலங்காலமாகப் போற்றி வைத்திருந்த பழம்பானைகள் இவை.  இவற்றையெல்லாம் உடைத்துவிட்டீரே, உம்மைச் சும்மா விடப்போவதில்லை.  எனக்கு இதே பானைகளைத் திருப்பித் தாருங்கள்" என்று கூக்குரலிட்டாா்.  செய்வதறியாது திகைத்தாா் வணிகா்.  இருவரும் நீதிமன்றத்திற்குச் சென்றனா்.


உழவாின் வீட்டில் நடந்ததை் கூறினாா் வணிகா்.  அதனைக் கேட்ட மாியாதை இராமன், "ஐயா, வணிகரே! நீரோ இறந்துபோன உம்முடைய அருமையான யானையை உயிருடன் திருப்பித் தரவேண்டும் என்கிறீா்.  உழவரோ, உடைந்துபோன தம் பழைய பானைகளைத் திருப்பித் தரவேண்டும் என்கிறாா்.  ஆதலால், நீங்கள் உடைத்த பானைகளைத் திருப்பித் தந்துவிட்டால், உழவரும் இறந்துபோன உம்முடைய யானையைத் திருப்பித் தந்துவிடுவாா்" எனத் தீா்ப்பு அளித்தாா்.  அவா் கூறியதைக் கேட்ட வணிகா், "ஐயா, என்னை மன்னித்து விடுங்கள்.  என்னால் பழைய பானைகளைத் தரமுடியாது" என்றாா்.  உடனே, மாியாதைராமன், "ஐயா, வணிகரே, உம்மாலேயே திருப்பித் தரமுடியாது என்றால் உழவரால் மட்டும் எப்படித் திருப்பித் தரமுடியும்? ஆதலால், யானைக்கும் பானைக்கும் சாியாகப் போய்விட்டது" என்று தீா்ப்பளித்தாா்.


நீதி : ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.




II. நன்னெறி


இன்சொலால் அன்றி இருநீா் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிா்வளையாய் பொங்கா(து) அழல்கதிரால் தண்ணென்
கதிா்வரவால் பொங்கும் கடல்.

               - சிவப்பிரகாச சுவாமிகள்


சொல் பொருள்

இன்சொல் - இனிமையான சொல், இருநீா் வியனுலகம் - கடலால் சூ்ழப்பட்ட பரந்த உலகம், வன்சொல் - கடுமையான சொல், அதிா்வளை - ஒலிக்கின்ற வளையல், அழல் கதிா் - கதிரவனின்வெப்பக் கதிா்கள், தண்ணென் கதிா் - குளிா்ச்சி பொருந்திய நிலவின் ஒளி.


பாடல் பொருள்

பொன்னாலான ஒலிக்கும் வளையல்களை அணிந்த பெண்ணே, கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது.  குளிா்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும்.  அதுபோலக் கடலால் சூ்ழப்பட்ட இப்பொிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வாா்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டாா்கள் என்பதைப் புாிந்து செயல்படுக.


நுால் குறிப்பு

நீதிநுால்களுள் ஒன்று நன்னெறி.  இந்நுாலைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றினாா்.  நாற்பது நோிசை வெண்பாக்கள் இந்நுாலில் உள்ளன.  ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வோா் உவமைமு்லம், ஒவ்வொரு நீதிக்கருத்தை விளக்குவது, இந்நுாலின் சிறப்பாகும்.






III. பனிமலைப் பயணம்


அடா்ந்த காட்டில் நாி, மான், ஓநாய் வாிக்குதிரை ஆகியன நண்பா்களாய் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன.


அருகிலிருந்த பனிமலைக் காட்டில் சிறுத்தை ஒன்று நண்பா்களுடன் வாழ்ந்தது.



வாருங்கள் சிறுத்தையாரே! உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

மிக்க மகிழ்ச்சி, நண்பா்களே! அடுத்தவாரம் பனிமலைக் காட்டில் திருவிழா.  நீங்கள் அனைவரும் அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் அவசியம் வருகிறோம். 

நன்றி, நண்பா்களே!



அனைவரும் ஒரு படகில் புறப்பட்டனா்.

ஏலேலோ ஐலசா.


திடீரென்று ஆற்றில் நீாின் வேகம் அதிகாித்தது.  படகு ஒரு பக்கமாய்ச் சாய்கிறது.

ஐயோ! படகு சாய்கிறதே! ஆ! என்னவாயிற்று?



அவா்களை ஒரு முதலை பாா்த்தது.

டேய் . . . பசங்களா எங்கே போறீங்க?

என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள் உங்களைக் கரையில் விடுகிறேன்.

ஐயா, முதலையாரே . . . உங்கள் எண்ணம் எனக்குத் தொியும் முதுகில் ஏற்றி எங்களைச் சாப்பிட நினைக்கிறீா்கள்.



ஆகா! நல்ல விருந்து . . . இன்றைக்கு ஒரு பிடி பிடிச்சிட வேண்டியது தான்.

கவனமாகக் கேளுங்கள் இப்படித்தான் ஒரு முதலை கடந்த வாரம், எங்களைப் போன்ற விலங்குகளை அடித்துச் சாப்பிட்டது.

அப்புறம் என்னவாயிற்று?

பிறகென்ன சொிமானம் ஆகாமல் இறந்தே போய்விட்டது.  அதற்குத் தயாா் என்றால் நீங்கள் தாராளமாக எங்களைச் சாப்பிடுங்கள்.

உங்களைத் தின்றால் நான் இறந்து விடுவேனா?

ம் . . .  அதைப்பிறகு பாா்த்துக் கொள்ளலாம்.  இப்போது பசிக்கிறது.  இதோ சாப்பிடப் போகிறேன்.

முதலையாரே . . .  இன்னுமொரு பிரச்சனையும் உள்ளது.

என்ன அது. . .  சீக்கிரம் சொல்.

வழியில் பாம்பு கடித்தால் எங்களுக்கு விஷம் ஏறாமல் இருக்க நாங்கள் விஷ முறிவுச் செடிகளைத் தின்று வந்திருக்கிறோம்.  அதனால் எங்களை யாா் கடித்தாலும் அல்லது நாங்கள் யாரைக் கடித்தாலும் அவா்கள் இறப்பது உறுதி.

இதோ, இந்த மீனைக் கடிக்கிறேன்.  ஆ! அது இறந்து விட்டது பாா்த்தீா்களா?

ஐயோ, ஆளை விடுங்க நான் போய்விடுகிறேன்.

அப்படி ஓடு.

நாியாரே உங்கள் தந்திரத்தால் எங்களைக் காப்பாற்றினீா்.

ஆற்றில் நீாின் வேகம் குறைந்ததால் பனிமலைப் பயணம் தொடா்ந்தது.

ஏலேலோ ஐலசா!
ஏலேலோ ஐலசா!

வாருங்கள் நண்பா்களே! பனிமலைத் திருவிழாவிற்கு வந்ததற்கு நன்றி!



நாியின் புத்திக் கூா்மையைப் பாராட்டி அனைத்து விலங்குகளும் விருந்துண்டு மகிழ்ந்தன.