Kids Learning Tamil
Kids Learning Tamil
3-ம் வகுப்பு தமிழ் பருவம்-II
I. வாலு போயி கத்தி வந்தது ! டும் . . . டும் . . டும் . . . டும்
ஒருநாள், ஓணான் ஒன்று வேலியைத் தாண்டும்போது அதன் வாலில் முள் குத்தி மாட்டிக்கொண்டது.
குத்திய முள்ளை எடுத்துவிட ஊருக்குள் நுழைந்து உதவி கேட்க நினைத்தது.
ஐயா, உழவரே! என் வாலில் முள் குத்திவிட்டது. கொஞ்சம் எடுத்து விடுங்களேன்.
ஓணானின் வாலிலுள்ள முள்ளை எடுக்கும்போது வால் அறுந்து விட்டது.
ஆ! என் வால் அறுந்து விட்டதே!
ஏ... உழவரே! என் வாலைத் தருகிறாயா? இல்லை, உன் கத்தியைத் தருகிறாயா?
இந்தா! கத்தியை வைத்துக் கொள், ஆளை விடு...
காட்டில் ஒருவர் மரம் வெட்டிக் கொண்டிருந்தார் அவரைப் பார்த்து...
ரொம்ப சிரமப்படுகிறாய். இந்தா கத்தி, இதனால் வெட்டு.
மரத்தை வெட்டும்போது கத்தி உடைந்துவிட்டது.
அட ! கத்தி உடைந்துவிட்டதே !
விறகு வெட்டியே... என் கத்தியைத் தருகிறாயா? இல்லை விளக்கைத் தருகிறாயா?
இந்தா... விறகை நீயே வைத்துக்கொள்.
தொடர்ச்சி
பிறகு, வழியில் தோசை சுடும் பாட்டியைப் பார்த்தது
பாட்டி! இந்த விறகை வைத்துக் கொள். தோசையைச் சுடு
அடடா! எல்லா விறகையும் எரித்து விட்டாயா?
இதப்பாரு பாட்டி, என் விறகைத் தருகிறாயா? இல்லை தோசையைத் தருகிறாயா?
சரி! சரி! இந்தா தோசையை எடுத்துக்கொள்.
பிறகு ஓணான், மோர் விற்கும் பெண்ணை வழியில் பார்த்து.
பெண்ணே பசியா? இந்தா, தோசையைச் சாப்பிடு.
மோர் விற்கும் பெண் தோசையைச் சாப்பிட்டு முடித்தாள்.
ஓ... தோசை முழுவதையும் சாப்பிட்டு விட்டாயா?
பெண்ணே என் தோசையைத் தருகிறாயா? இல்லை, பாதனையைத் தருகிறாயா?
பானையை ஓணான் பெற்றுக் கொண்டது.
இந்தா... என் பானையை வைத்துக்கொள்
வழியில் தோட்டக்காரரைப் பார்த்த ஓணான்,
தோட்டக்காரரே, தண்ணீர் எடுத்து ஊற்றுவதற்கு இந்தப் பானையை வைத்துக்கொள்...
தோட்டக்காரர் செடிகளுக்கு நீரூற்றும்போது பானை உடைந்து விட்டது.
ஆ! என் பானை உடைந்து போயிற்றே!
என் பானையைத் தருகிறாயா? இல்லை, பூவைத் தருகிறாயா?
இந்தா... பூக்களைத் தருகிறேன், எடுத்துக்கொள்.
வழியில் மேளம் வாசிக்கும் பெண்ணை ஓணான் பார்த்தது.
இந்தா... பெண்ணே! பூக்களை வைத்துக்கொள், அழகாக இருப்பாய்.
அந்தப் பெண் பூக்களைத் தலையில் வைக்குப்போது, அவை உதிர்ந்தன.
அடடே! என் பூக்கள் உதிர்ந்து போயிற்றே.
பெண்ணே! பூக்களைத் தருகிறாயா? இல்லை, மேளத்தைத் தருகிறாயா?
அந்தப் பெண் பயந்தவாறு,
சரி சரி இந்த மேளத்தை வைத்துக்கொள்...
ஓணான் அந்த மேளத்தை அடித்தவாறே மகிழ்ச்சியோடு பாடியது.
வாலு போயி கத்தி வந்தது டும்...டும்...டும்...டும்
கத்தி போயி விறகு வந்தது டும்...டும்...டும்...டும்
விறகு போயி தோசை வந்தது டும்...டும்...டும்...டும்
தோசை போயி பானை வந்தது டும்..டும்...டும்...டும்
பானை போயி பூவு வந்தது டும்...டும்...டும்...டும்
பூவு போயி மேளம் வந்தது டும்...டும்...டும்...டும்
II. எழில் கொஞ்சும் அருவி
(அங்கவை, சங்கவை இருவரும் சித்தப்பா, சித்தி வீட்டிற்குச் செல்கிறார்கள்)
சித்தி - வாருங்கள், செல்லங்களே! வீட்டில் எல்லாரும் நலமா?
அங்கவை
சங்கவை - நலமாய் உள்ளோம் சித்தி, நீங்கள் நலமா?
சித்தப்பா - நீங்கள் இருவரும் கல்விச் சுற்றுலா சென்று வந்தீர்களா மே! அதைப் பற்றிக் கூறுங்கள் கேட்போம்.
அங்கவை - நாங்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒகேனக்கல் அருவிக்குப் போய் வந்தோம். அதைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்.
சங்கவை - எழில் கொஞ்சும் மலையில் உள்ள அந்த அருவி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது.
சித்தப்பா - மலையின் உச்சியிலிருந்து வெள்ளியை உருக்கி ஊற்றியது போல பேரிரைச்சலுடன் கீழ் நோக்கி விழும் அருவி பார்க்க பார்க்க அழகு இல்லையா?
அங்கவை - ஆம் சித்தப்பா அழகோ, அழகு.
சித்தப்பா - அதற்கு ஒகேனக்கல் என்ற பெயர் எப்படி வந்ததாம்? தெரிந்து கொண்டீர்களா?
அங்கவை - ஒகேனக்கல் என்பதற்குப் புகையும் கல்பாறை எனப்பொருள். கன்னடத்தில் ஒகே என்பது புகை ஆகும். அருவி நீர் கல்பாறையில் பட்டுத் தெறித்து, வெண்புகை போலத் தோற்றம் அளிப்பதால் தான் இப்பெயர் வந்தது. காவேரி ஆறு கர்நாடகத்திலுள்ள குடகு மலையில் தோன்றி இங்குதான் தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைகிறது.
சங்கவை - உல்லாசப் பயணிகளைப் பெரும் ஆரவாரத்தோடு வரவேற்கும் அருவியில் தண்ணீர் கொட்டும் காட்சி அற்புதமாக இருக்கும்.
சித்தி - அவ்விடத்திற்கு எதன்மூலம் பயணம் செய்தீர்கள்?
சங்கவை - இந்தக் கண்கொள்ளாக் காட்சியினை கண்டுகளிக்க பரிசலில் சென்றோம். என்னே அருமை! 100 அடி உயரத்திலிருந்து விழும் அருவியில் குளித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
சித்தப்பா - பரிசலில் செல்லும் வழியில் என்னென்ன பார்த்தீர்கள்?
அங்கவை - மலை நடுவே பாதையமைத்து அருவி நீர் ஓடும் காட்சி வெண்ணெய் உருகுவது போல தெரிந்தது. இந்தப் பரிசலில் பயணம் சென்றது எங்களை ஆனந்தக் களிப்பில் ஆழ்த்தியது.
சங்கவை - இரு மலைகளுக்கு இடையே தொங்குபாலத்தில் சென்றோம்.
அங்கவை - நாங்கள் எல்லாரும் நீராடிவிட்டு, மீண்டும் பரிசலில் கரைக்கு வந்தோம். உணவு உண்டபின், மான் பூங்காவிற்குச் சென்றோம். துள்ளித்திரியும் மான் கூட்டம், முதலைப் பண்ணை முதலியவற்றைப் பார்த்தோம்.
சங்கவை - சித்தி, அங்கே மிகப் பழமையான தேசநாதஸ்வரர் கோவில் உள்ளது. அது அதியமான் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கல்வெட்டைப் படித்து, அறிந்து கொண்டோம்.
சித்தப்பா - பாராட்டுக்கள், குழந்தைகளே! அருவியின் அழகை கண்டுகளித்து மட்டுமின்றி, அங்குள்ள பொதுஅறிவுச் செய்திகளையும் திரட்டியிருக்கிறீர்கள்.
சித்தி - நன்றி குழந்தைகளே! எங்களுக்கும் ஒகேனக்கலை நேரே சென்று பார்த்த பரவசத்தை உண்டாக்கி விட்டீர்கள்! நாமும் குடும்பத்துடன் ஒருமுறை சென்று வருவோம்.
Kids Learning Tamil
3-ம் வகுப்பு தமிழ் பருவம்-II
திருக்குறள் கதைகள்
I. சரியான தீர்ப்பு
முன்பொரு காலத்தில் மரியாதைராமன் என்பவர் வாழ்ந்து வந்த ஊரில் வளவன் என்பவன் மளிகைக் கடை வைத்து வாணிகம் செய்து வந்தான்.
வளவன் பணம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவன். யாருக்கும் கொடுத்து உதவ மாட்டான். அரசுக்கும் முறையாக வரி செலுத்துவதில்லை.
இந்நிலையில், மரியாதைராமன் அவ்வூரின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மரியாதைராமன் வளவனின் இளம்வயது நண்பன். அதனால், நீதிபதி தனது நண்பன் என, வளவன் ஊர் முழுவதும் கூறிவந்தான். முறையாக வரி செலுத்தாதவர்களின் பட்டியல் நீதிபதியிடம் ஒருநாள் வழங்கப்பட்டது. நீதிபதியின் ஆட்கள் வளவனை அழைத்துச் சென்றனர். நீதிபதி தனது நண்பனாயிற்றே, தனக்குத் தண்டனை தரமாட்டார் என எண்ணியவாறே மகிழ்ச்சியாகச் சென்றான் வளவன். வளவனின் நண்பன் என்பதால் மரியாதை ராமனும் எப்படித் தீர்ப்பு வழங்குவாரோ என அவரது பண்பையும் நேர்மையையும் மக்கள் சந்தேகப்பட்டனர். ஆனால், மரியாதைராமன், நண்பனாக இருந்தாலும் தவறு செய்தவன் என்பதால், முறைப்படி அவனுடைய பொருள்களை அரசாங்கக் கருவூலத்தில் சேர்த்திடச் செய்தார். மேலும், வளவனுக்கு ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.
எவ்விதச் சார்பும் இன்றி நடுவு நிலைமையோடு தீர்ப்பு வழங்கிய மரியாதைராமனை அனைவரும் பாராட்டினர்.
குறள்
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்.
விளக்கம்
ஒருவர் நடுவு நிலைமை உடையவர், இல்லாதவர் என்பது அவருக்குப் பின் நிலைத்து நிற்கும் புகழாலும் பழியாலும் அறியப்படும்.
II. காலத்தே பயிர் செய்
முன்னொரு காலத்தில் மலைச்சாமி என்ற ஏழை விவசாயி, இலந்தைக்குட்டை என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவனுக்கென்று சொந்தநிலம் ஏதும் கிடையாது. ஆனால், விவசாயம்தான் சோறு போடும் என்பதை ஆணித்தரமாக நம்பினான். அதே ஊரில் வசித்துவரும் மாதையன் என்ற செல்வந்தனின் நிலத்தைக் குத்தகைக்குக் கேட்டான். அச்செல்வந்தனும் சில நிபந்தனைகளுடன் தன் நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதிப்பதாகக் கூறினான். அதனை ஒப்புக்கொண்ட விவசாயி செல்வந்தனின் நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கினான். அச்செல்வந்தன் விவசாயியின் உழைப்பைச் சுரண்டுவதிலேயே குறிக்கோளாய் இருந்தான். இருந்தபோதிலும் மலைச்சாமி நேர்யானவனாகவும், புத்திசாலியாகவும் இருந்ததால் செல்வந்தனிடம் ஏமாறவில்லை.
ஒருமுறை செல்வந்தன் விவசாயியின் குத்தகைக்கு ஈடாக "மண்ணுக்கு மேலே விளைபவை எனக்கு, மண்ணுக்குக் கீழே விளைபவை உனக்கு" என்று கட்டளையிட்டான். புத்திக்கூர்மை யுடன் விவசாயி நிலக்கடலை பயிரிட்டால் விவசாயிக்கே இலாபம் கிட்டியது. ஏமாற்றமடைந்த செல்வந்தன் அடுத்தமுறை விவசாயியை ஏமாற்ற எண்ணி நிபந்தனையை மாற்றினான். இம்முறை "மண்ணுக்குக் கீழே விளைபவை எனக்கு, மண்ணுக்கு மேலே விளைபவை உனக்கு" என்றான். ஆராய்ந்த விவசாயி இம்முறை நெல் பயிரிட்டான். இம்முறையும் விவசாயிக்கே இலாபம், ஏமாற்றத்துடன் வீடு திம்பினான் செல்வந்தன். அதனால் எவ்விடத்து எதை, எப்படி, எக்காலத்தில் செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்தால் உலகையே வென்று விடலாம்.
குறள்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்.
விளக்கம்
செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால் உலகமே வேண்டும் எனக் கருதினாலும் அது கைகூடும்.
III. அன்பெனும் அருங்குணம்
அழகிய ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் பறவைகளும், விலங்குகளும் வாழ்ந்து வந்தன. அங்கு இருந்த கரடி மட்டும் சேட்டைகள் பல செய்து வாழ்ந்தது. பறவையின் கூட்டை எட்டிப்பார்க்கும். குஞ்சுகள் என்றும் பாராமல் "இதோ உங்களைத் தூக்கி எறிகிறேன் பாருங்கள்" என்று கூட்டைப் பிய்த்து எறியும். குரங்குகள் வந்தால் தங்கவே இடம் தராமல் துரத்தி விட்டுவிடும். சில சமயங்களில் குட்டி குரங்குகளின் தலையில் குட்டு வைக்கும். அவை தலை வீங்கி அழுவதைப் பார்த்து சிரிக்கும். இவ்வாறு யாரிடமும் அன்பு காட்டாமல் வெறுப்புடனே நடந்துகொள்ளும். அதனால் பறவைகளும், குரங்குகளும் வேறு மரத்திற்கே சென்று விட்டன. ஒருமுறை வேடன் ஒருவன் விரித்து வைத்திருந்த வலையில் எதிர்பாராமல் கரடி சிக்கிக் கொண்டது. அது காடே அதிரும் வகையில் சத்தமிட்டு அலறியது. வேடன் விரித்த வலையிலிருந்து தன்னைக் காப்பாற்றும்படி கதறியது. ஆனால், ஒருவரையும் காணோம். தான் யாரிடமும் அன்பு காட்டாமல் இருந்ததுதான் இந்த நிலைமைக்குக் காரணம் என்பதை உணர்ந்து ஓவென் அழுதது. இவ்வேளையில் கரடியின் சத்தம் கேட்டு வந்த பறவைகள், வேடனைக் கொத்திக் கொத்திக் துரத்தின. குரங்குகள் வலையைப் பிய்த்துக் காப்பாற்றின. அன்றுமுதல் கரடி எல்லாரிடமும் அன்பு செலுத்தத் தொடங்கியது.
குறள்
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.
விளக்கம்
எலும்பு இல்லாத உயிரை வெயில் காய்ந்து வருத்தும். அதுபோல அன்பு இல்லாத உயிர்களை அறம் வருத்தும்.
IV. கல்வியே நமது செல்வம்
V. உண்மையான அணிகலன்கள்
முதியவர் ஒருவர் ஆலமரத்தடியில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார். பக்கத்து ஊருக்குச் செல்வதற்காக அவ்வழியே செல்வந்தர் ஒருவர் வந்தார். அவர் அந்த முதியவரைப் பார்த்து, "என்னையா இவ்வழியே போனால் பருத்தியூர் போய்ச் சேரலாமா?" என்று ஆணவத்துடன் ஓங்கிய குரலில் கேட்டார். அதற்கு அந்த முதியவர் எனக்குத் தெரியாது என்று பதிலளித்தார். முணுமுணுத்துக் கொண்டே அந்தச் செல்வந்தர் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார். சற்று நேரத்தில் மற்றொருவர் ஏராளமான ஆபரணங்கள் அணிந்துகொண்டு அங்கு வந்தார். அவர், "என்ன முதியவரே, இந்த வழியே யாரேனும் சற்று நேரத்திற்கு முன் போனார்களா?" என்று கேட்டார். அதற்கு முதியவர் எனக்குத் தெரியாது என்று அமர்ந்தபடியே பதில் கூறினார். எனக்கு ஊரில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது தெரியுமா? நான் கேட்கும்போது எழுந்து பதில் கூற மாட்டாயா? என்று முதியவரைக் கடிந்து கொண்டு சென்றார் அவர்.
மூன்றாவதாக இளைஞன் ஒருவன் அவ்வழியே வந்து முதியவரிடம் " ஐயா, வணக்கம். நான் வழி தவறி இங்கே வந்துவிட்டேன். எனக்குப் பருத்தியூர் செல்வதற்கு அருள்கூர்ந்து வழி கூறுங்கள்" என்றான். முதியவரும் உரிய வழியைக் கூறினார். "ஐயா, தங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா?" என்று கேட்டான் அந்த இளைஞன். அதற்கு அந்த முதியவர், "வேண்டா" என மறுத்துக் கூறினார். பின்னர், இதுவரை அங்கு நடந்ததைக் கூறி, "தம்பி, நாம் எவ்வளவுதான் செல்வச் செழிப்புடன் இருந்தாலும் பணிவுடைமையே நமக்குச் சிறந்த பண்பு" என்று கூற, அந்த இளைஞனை வாழ்த்தி அனுப்பினார்.
குறள்
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.
விளக்கம்
பணிவு உடையவராகவும் இனிமையான சொற்கள் பேசுபவராகவும் இருப்பதே ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன். மற்றவையெல்லாம் உண்மையான அணிகலன்கள் ஆகா.
Kids Learning Tamil
3-ம் வகுப்பு தமிழ் பருவம் - II
I. உண்மையே உயர்வு கதைப்பாடல்
உப்பு மூட்டை சுமந்து தான்கழுதை ஒன்று வந்தது
ஓடை கடக்கும் நேரத்தில்
நீரில் உப்பு கரைந்ததும்
எடை குறைந்து போனது
நனைந்த மூட்டை அதனையே
கழுதை முதுகில் ஏற்றியே
உரிமையாளர் கழுதையை
வேகமாக ஓட்டினார்
உப்பு எடை குறைந்ததால்
கழுதை மகிந்து சென்றது
நாள்தோறும் உப்பு மூட்டையை
கழுதை மீது ஏற்றினார்
ஓடைக் கரையில் வந்ததும்
அசைத்துக் கீழே தள்ளிடும்
எடையும் குறைந்து போய்விடும்
கழுதை மகிழ்ச்சி கொண்டிடும்
புரிந்துகொண்ட உரிமையாளர்
பாடம் புகட்ட எண்ணினார்
அடுத்த நாளும் வந்தது
பஞ்சு மூட்டை ஒன்றையே
கழுதை மீது ஏற்றினார்
ஓடைக்குள்ளே வந்ததும்
அசைத்துக் கீழே தள்ளியது
எடை குறையும் என்றுதான்
உப்பைப் போல நினைத்தது
நீரில் நனைந்த பஞ்சுகளால்
எடையும் அதிகம் ஆனது
உரிமையாளர் மூட்டையை
கழுதை முதுகில் ஏற்றினார்
கனத்த மூட்டை அழுத்தவே
கழுதை வருந்தி அழுதது
உண்மையான உழைப்புத் தான்
வாழ்வில் உயர்வைத் தந்திடும்
ஏய்த்துப் பிழைக்க எண்ணினால்
என்றுமில்லை வெற்றியே!
II. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
III. கல்வி கண் போன்றது
விரியூர் கிராமத்திலுள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் அன்று கிராமசபைக் கூட்டம். வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பைக் கேட்ட பொன்வண்ணன, தம் கடையைப் பூட்டிவிட்டுக் கூட்டத்திற்குச் சென்றார்.
ஊராட்சிமன்த் தலைவர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். சிறுதொழில் தொடங்கு வதற்கான உதவித்தொகை வழங்கும் அரசின் திட்டம் குறித்துப் பேசினார். இத்திட்டத்தின் கீழ் யார் யாருக்கெல்லாம் உதவித் தொகை வந்திருக்கிறதோ அவர்களின் பெயர்களைப் படித்தார்.
பொன்வண்ணன் தம்முடைய பெயர் வருகிறதா என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால், கடைசி வரை அவர் பெயர் வரவேயில்லை.
பொன்வண்ணன், தலைவரிடம் சென்றார். "ஐயா! எனக்கு ஏன் உதவித்தொகை இல்லை? நானும் பண வசதியில்லாமல் மிகவும் துன்பப்படுகிறேனே....." என்று கேட்டார்.
"யாருக்கெல்லாம் பண உதவி தேவையோ, அவர்களுக்கான கூட்டம் பற்றி உங்களுக்கு அஞ்சல் மூலம் தெரிவித்து இருந்தோமே! நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?" என்றார் தலைவர்.
"ஆமாம் போன வாரம் அஞ்சல்காரர் கொடுத்தார். படிக்கத் தெரியாததால் அப்படியே வைத்துவிட்டேன்".
"என்னப்பா! உனக்குத்தான் படிக்கத் தெரியல, ஆனா, உம்பையன்தான் பள்ளியிலே படிக்கிறானே, அது எப்படி தெரியாமல் போகும்?
பொன்வண்ணன் சற்றுக் குற்ற உணர்வோடு தலை குனிந்தபடி கூறினார், " ஐயா! நான் மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கிறேன்.
எனக்கு உதவி செய்வதற்காக, அவனை அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்கச் சொல்வேன். சில சமயங்களில் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனால்தானோ என்னவோ அவனுக்குச் சரியாக எழுதவும் படிக்கவும் தெரியாமலே போய்விட்டது. அவனுடைய ஆசிரியரும் இதைப்பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார். பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்புமாறு அறிவுரையும் கூறுவார். நான்தான் தப்பு செய்துவிட்டேன். என் மகனை இப்படிப் படிக்கத் தெரியாதவனாக ஆக்கி விட்டேன்." என்று வருத்தத்துடன் கூறினார் பொன்வண்ணன்.
"உங்கள் அறியாமையால் இப்போது என்னவாயிற்று பார்த்தீர்களா? அரசின் உதவித் தொகையை உங்களால் பெற முடியாமல் போய்விட்டதே. கல்வி அறிவு இருந்தால் தான் நாள்தோறும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளையும் அறிவியல் மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடியும். நம்மையும் மேம்படுத்திக்கொள்ள முடியும். கல்வி, தொழிலுக்கு வழிகாட்டுகிறது. வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுகிறது. இப்போதாவது புரிந்து கொண்டீர்களா?
ஐயா! இப்ப நான் நன்கு புரிந்து கொண்டேன். நான்தான் கல்வி கற்காமல் இருந்து விட்டேன். என் மகனாவது நன்கு படித்து வாழ்வில் முன்னேறட்டும். இனி நான் என் மகனை வேலைக்காகப் பள்ளியைவிட்டு நிறுத்த மாட்டேன். இப்போதே என் மகனை அழைத்துச் சென்று தலைமை ஆசிரியரிடம் மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு நான் வேண்டிக் கொள்வேன்.
புரிந்து கொண்டால் சரிதான். உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால நீங்க மட்டும் தெரிந்துகொண்டால் போதாது. நம் கிராமத்தினர் அனைவருமே அறியாமை நீங்கி, கல்வி குறித்த விழிப்புணர்வு பெறவேண்டும்.
கல்வியின் தேவையை எடுத்துக் கூறிய ஊராட்சி மன்றத் தலைவருக்கு, நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் பொன்வண்ணன்.