3-ம் வகுப்பு தமிழ் பருவம்-II
I. வாலு போயி கத்தி வந்தது ! டும் . . . டும் . . டும் . . . டும்
ஒருநாள், ஓணான் ஒன்று வேலியைத் தாண்டும்போது அதன் வாலில் முள் குத்தி மாட்டிக்கொண்டது.
குத்திய முள்ளை எடுத்துவிட ஊருக்குள் நுழைந்து உதவி கேட்க நினைத்தது.
ஐயா, உழவரே! என் வாலில் முள் குத்திவிட்டது. கொஞ்சம் எடுத்து விடுங்களேன்.
ஓணானின் வாலிலுள்ள முள்ளை எடுக்கும்போது வால் அறுந்து விட்டது.
ஆ! என் வால் அறுந்து விட்டதே!
ஏ... உழவரே! என் வாலைத் தருகிறாயா? இல்லை, உன் கத்தியைத் தருகிறாயா?
இந்தா! கத்தியை வைத்துக் கொள், ஆளை விடு...
காட்டில் ஒருவர் மரம் வெட்டிக் கொண்டிருந்தார் அவரைப் பார்த்து...
ரொம்ப சிரமப்படுகிறாய். இந்தா கத்தி, இதனால் வெட்டு.
மரத்தை வெட்டும்போது கத்தி உடைந்துவிட்டது.
அட ! கத்தி உடைந்துவிட்டதே !
விறகு வெட்டியே... என் கத்தியைத் தருகிறாயா? இல்லை விளக்கைத் தருகிறாயா?
இந்தா... விறகை நீயே வைத்துக்கொள்.
தொடர்ச்சி
பிறகு, வழியில் தோசை சுடும் பாட்டியைப் பார்த்தது
பாட்டி! இந்த விறகை வைத்துக் கொள். தோசையைச் சுடு
அடடா! எல்லா விறகையும் எரித்து விட்டாயா?
இதப்பாரு பாட்டி, என் விறகைத் தருகிறாயா? இல்லை தோசையைத் தருகிறாயா?
சரி! சரி! இந்தா தோசையை எடுத்துக்கொள்.
பிறகு ஓணான், மோர் விற்கும் பெண்ணை வழியில் பார்த்து.
பெண்ணே பசியா? இந்தா, தோசையைச் சாப்பிடு.
மோர் விற்கும் பெண் தோசையைச் சாப்பிட்டு முடித்தாள்.
ஓ... தோசை முழுவதையும் சாப்பிட்டு விட்டாயா?
பெண்ணே என் தோசையைத் தருகிறாயா? இல்லை, பாதனையைத் தருகிறாயா?
பானையை ஓணான் பெற்றுக் கொண்டது.
இந்தா... என் பானையை வைத்துக்கொள்
வழியில் தோட்டக்காரரைப் பார்த்த ஓணான்,
தோட்டக்காரரே, தண்ணீர் எடுத்து ஊற்றுவதற்கு இந்தப் பானையை வைத்துக்கொள்...
தோட்டக்காரர் செடிகளுக்கு நீரூற்றும்போது பானை உடைந்து விட்டது.
ஆ! என் பானை உடைந்து போயிற்றே!
என் பானையைத் தருகிறாயா? இல்லை, பூவைத் தருகிறாயா?
இந்தா... பூக்களைத் தருகிறேன், எடுத்துக்கொள்.
வழியில் மேளம் வாசிக்கும் பெண்ணை ஓணான் பார்த்தது.
இந்தா... பெண்ணே! பூக்களை வைத்துக்கொள், அழகாக இருப்பாய்.
அந்தப் பெண் பூக்களைத் தலையில் வைக்குப்போது, அவை உதிர்ந்தன.
அடடே! என் பூக்கள் உதிர்ந்து போயிற்றே.
பெண்ணே! பூக்களைத் தருகிறாயா? இல்லை, மேளத்தைத் தருகிறாயா?
அந்தப் பெண் பயந்தவாறு,
சரி சரி இந்த மேளத்தை வைத்துக்கொள்...
ஓணான் அந்த மேளத்தை அடித்தவாறே மகிழ்ச்சியோடு பாடியது.
வாலு போயி கத்தி வந்தது டும்...டும்...டும்...டும்
கத்தி போயி விறகு வந்தது டும்...டும்...டும்...டும்
விறகு போயி தோசை வந்தது டும்...டும்...டும்...டும்
தோசை போயி பானை வந்தது டும்..டும்...டும்...டும்
பானை போயி பூவு வந்தது டும்...டும்...டும்...டும்
பூவு போயி மேளம் வந்தது டும்...டும்...டும்...டும்
II. எழில் கொஞ்சும் அருவி
(அங்கவை, சங்கவை இருவரும் சித்தப்பா, சித்தி வீட்டிற்குச் செல்கிறார்கள்)
சித்தி - வாருங்கள், செல்லங்களே! வீட்டில் எல்லாரும் நலமா?
அங்கவை
சங்கவை - நலமாய் உள்ளோம் சித்தி, நீங்கள் நலமா?
சித்தப்பா - நீங்கள் இருவரும் கல்விச் சுற்றுலா சென்று வந்தீர்களா மே! அதைப் பற்றிக் கூறுங்கள் கேட்போம்.
அங்கவை - நாங்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒகேனக்கல் அருவிக்குப் போய் வந்தோம். அதைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்.
சங்கவை - எழில் கொஞ்சும் மலையில் உள்ள அந்த அருவி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது.
சித்தப்பா - மலையின் உச்சியிலிருந்து வெள்ளியை உருக்கி ஊற்றியது போல பேரிரைச்சலுடன் கீழ் நோக்கி விழும் அருவி பார்க்க பார்க்க அழகு இல்லையா?
அங்கவை - ஆம் சித்தப்பா அழகோ, அழகு.
சித்தப்பா - அதற்கு ஒகேனக்கல் என்ற பெயர் எப்படி வந்ததாம்? தெரிந்து கொண்டீர்களா?
அங்கவை - ஒகேனக்கல் என்பதற்குப் புகையும் கல்பாறை எனப்பொருள். கன்னடத்தில் ஒகே என்பது புகை ஆகும். அருவி நீர் கல்பாறையில் பட்டுத் தெறித்து, வெண்புகை போலத் தோற்றம் அளிப்பதால் தான் இப்பெயர் வந்தது. காவேரி ஆறு கர்நாடகத்திலுள்ள குடகு மலையில் தோன்றி இங்குதான் தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைகிறது.
சங்கவை - உல்லாசப் பயணிகளைப் பெரும் ஆரவாரத்தோடு வரவேற்கும் அருவியில் தண்ணீர் கொட்டும் காட்சி அற்புதமாக இருக்கும்.
சித்தி - அவ்விடத்திற்கு எதன்மூலம் பயணம் செய்தீர்கள்?
சங்கவை - இந்தக் கண்கொள்ளாக் காட்சியினை கண்டுகளிக்க பரிசலில் சென்றோம். என்னே அருமை! 100 அடி உயரத்திலிருந்து விழும் அருவியில் குளித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
சித்தப்பா - பரிசலில் செல்லும் வழியில் என்னென்ன பார்த்தீர்கள்?
அங்கவை - மலை நடுவே பாதையமைத்து அருவி நீர் ஓடும் காட்சி வெண்ணெய் உருகுவது போல தெரிந்தது. இந்தப் பரிசலில் பயணம் சென்றது எங்களை ஆனந்தக் களிப்பில் ஆழ்த்தியது.
சங்கவை - இரு மலைகளுக்கு இடையே தொங்குபாலத்தில் சென்றோம்.
அங்கவை - நாங்கள் எல்லாரும் நீராடிவிட்டு, மீண்டும் பரிசலில் கரைக்கு வந்தோம். உணவு உண்டபின், மான் பூங்காவிற்குச் சென்றோம். துள்ளித்திரியும் மான் கூட்டம், முதலைப் பண்ணை முதலியவற்றைப் பார்த்தோம்.
சங்கவை - சித்தி, அங்கே மிகப் பழமையான தேசநாதஸ்வரர் கோவில் உள்ளது. அது அதியமான் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கல்வெட்டைப் படித்து, அறிந்து கொண்டோம்.
சித்தப்பா - பாராட்டுக்கள், குழந்தைகளே! அருவியின் அழகை கண்டுகளித்து மட்டுமின்றி, அங்குள்ள பொதுஅறிவுச் செய்திகளையும் திரட்டியிருக்கிறீர்கள்.
சித்தி - நன்றி குழந்தைகளே! எங்களுக்கும் ஒகேனக்கலை நேரே சென்று பார்த்த பரவசத்தை உண்டாக்கி விட்டீர்கள்! நாமும் குடும்பத்துடன் ஒருமுறை சென்று வருவோம்.
No comments:
Post a Comment