Kids Learning: Kids Learning Tamil

Kids Learning Tamil


3-ம் வகுப்பு தமிழ் பருவம்-II

I. நாயும் ஓநாயும் கதை


பசியால் வாடி மெலிந்த ஓநாய், தின்பதற்கு ஏதாவது அகப்படுமா? என்று காடு முழுவதும் தேடித் திரிந்தது.  அப்போது கொழுகொழு என்றிருந்த ஒரு நாய், மகிழ்ச்சியுடன் எதிரே ஓடி வருவதைப் பார்த்தது.

அந்த நாயைத் தின்று விடலாமா என்று ஓநாய் நினைத்தது.  ஆனால், தான் அப்போது இருந்த சோர்வான நிலையில் அந்த நாயுடன் சண்டை போட்டுத் தோற்கடிக்க முடியுமா? என்பது சந்தேகமாய் இருந்தது.  அதனால் அதனுடன் நட்பாய்ப் பேச ஆரம்பித்தது.

ஓநாய் - நண்பா, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!

நாய் - நண்பனே, மிக்க மகிழ்ச்சி.  நான் சொல்கிறபடி செய்தால் நீயும் என்னைப்போல் கொழுகொழு என்று அழகாய் இருக்கலாம்.  நீ இந்தக் காட்டில் இருந்து பசியும் பட்டினியும் ஆக ஏன் துன்பப்படுகிறாய்? என்னுடன் வெளியே வந்துவிடு நல்ல உணவு கிடைக்கும்.

ஓநாய் - அப்படியானால், நான் என்ன வேலை செய்யவேண்டும்?

நாய் - வேலையாவது கீலையாவது.  ஒன்றுமே கிடையாது.  வீட்டுக்கு வருகிற அறிமுகம் இல்லாத புதியவர்களை விரட்டியடிக்க வேண்டும்.  வீட்டுக்காரர்களைப் பார்த்தால் வாலை ஆட்ட வேண்டும்.  அவ்வளவுதான், அதற்குப் பதிலாக விதவிதமான உணவுகள் கிடைக்கும்.  நமது தலையை வீட்டுக்காரர்கள் அன்பாக வருடிக் கொடுப்பார்கள்.  ஆகா! அது என்ன சுகம் தெரியுமா?

ஓநாய் - ஓ! அப்படியா! அவ்வளவு சுகமான வாழ்க்கையா! தயவு செய்து என்னையும் அழைத்துச் செல், நண்பா.

நாய் - வா நண்பா! என்னுடன் உன்னை அழைத்துச் செல்கிறேன்.  இன்றிலிருந்து உனக்கு நல்லகாலம்தான்.

ஓநாய் - இதோ, இப்போதே புறப்படுகிறேன்‌.  அது சரி, அது என்ன உன் கழுத்தில் ஒரு கருப்புப் பட்டை தொங்குகிறதே!

நாய் - அது ஒன்றுமில்லை, வா.

ஓநாய் - ஒன்றுமில்லை என்றால், கழுத்தில் எப்படி பட்டை வந்தது?

நாய் - என்னைச் சங்கிலியால் கட்டிப் போடுவதற்கு வசதியாகக் கழுத்தில் போடப்பட்ட பட்டை.  அவ்வளவுதான்!

ஓநாய் - என்ன, கட்டிப் போடுகிறார்களா! அப்படியானால், உன் விருப்பப்படி எப்பொழுது வேண்டுமானாலும் வெளியே போக முடியாதா?

நாய் - ஊ... கும், எப்பொழுதும் நம் விருப்பம்போல் போக முடியாது.  அதிலென்ன பிரமாதம்?

ஓநாய் - என்ன பிரமாதமா? அதுதான் எனக்குப் பெரிய காரியம்.  எப்படிப்பட்ட வாழ்க்கையாய் இருந்தாலும் சரி, என் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கமாட்டேன்.  வீட்டில் மாட்டிக் கொண்டு விதவிதமான உணவுகளைச் சாப்பிடுவதை விடச் சுதந்திரமாகக் காட்டில் அலைவதே மேல், நான் போகிறேன்.









II. நட்பே உயர்வு 

புதிர்க்கதை


அடர்ந்த காட்டில் முயலும் மானும் நெடுநாள் நண்பர்களாக வாழ்ந்து வந்தன.  இரண்டு விலங்குகளும் அன்பாய்ப் பழகி வந்தன.  மான் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் எப்படியாவது வேட்டையாட வேண்டும் என்ற எண்ணம் அங்குள்ள நரிக்குத் தோன்றியது.  நரி ஒரு நாள் மானிடம் "நண்பனே! நீ உன் நண்பன் முயல் மீது அளவுக்கு மீறிய பாசம் வைத்துள்ளாய்! என்பதை நான் அறிவேன்.  ஆனால் முயலோ, உன்னைவிட நான்தான் அழகு என்று எல்லா விலங்குகளிடமும் சொல்லிக் கொண்டு அலைகிறது.  

முயலிடம் தொடர்ந்து நீ நட்பு வைத்துக்கொண்டால் உன்னை ஏதாவது ஆபத்தில் மாட்டிவிடும்" என்றது நரி.  மானிற்கு நரியின் தந்திரம் புரியவில்லை.  "அது எப்படி?" என்று கேட்டது.  அதற்கு நரியானது, "அதோ தூரத்தில் தெரிகிற குகைக்கு முயல் உன்னை அழைத்துச் சென்று அங்கு வாழும் சிங்கத்திற்கு இரையாக்கிவிடும்" என்று பொய் கூறியது.  மானும் நரியின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் அதனை நம்பி நடுகாட்டிற்குள் சென்றது.  தனது நண்பனை வெகுநேரம் ஆகியும் காணவில்லையே! என்று முயல் துடிதுடித்தது‌. காட்டிற்குள் அலைந்து திரிந்து தேட ஆரம்பித்தது.  கடைசியில் நரி தந்திரமாக மானை வேட்டையாட அழைத்துச் சென்றதைப் பார்த்து விட்டது.  "நரியாரே! என் நண்பனை எங்கு அழைத்துச் செல்கிறாய்?" என்று கேட்டது.  "இன்றிலிருந்து மான் உன் நண்பன் அல்ல.  மான் என் நண்பன்" என்று நரி பதில் கூறியது.  "மானை விட்டுவிடு!" என்று கதறியது முயல்.  அப்படியானால் என் மூன்று புதிர்களுக்கு விடைகூறு? பிறகு விட்டுவிடுகிறேன் என்றது நரி.  சரி! புதிர்களைச் சொல் என்றது முயல்.

நரி புதிர்களைச் சொல்லத் தொடங்கியது.

புதிர் 1 : கீழே வரும் ஆனால் மேலே போகாது அது என்ன? 

புதிர் 2 : கைகள் இருக்கும், ஆனால் கைத்தட்டமுடியாது அது என்ன? 

புதிர் 3 : தொடக்கத்தில் உயரம் எரிந்து முடிந்தவுடன் குட்டை அது என்ன?

முயல் நரியிடம் இவ்வளவு தானே! இதோ விடை சொல்கிறேன் என்றது.  முதல் புதிருக்கு 'மழை' என்பதே விடையாகும்.  இரண்டாவது 'கடிகாரம்' என்பதே விடையாகும்.  மூன்றாவதற்கு 'மெழுகுவத்தி' என்பதே விடையாகும் என்றது.  முயல் விடை கூறியதைப் பார்த்துத் திகைத்து போனது நரி.  நீ கூறியபடி புதிருக்கு விடை சொல்லிவிட்டேன் என் நண்பனை என்னிடம் அனுப்பி விடு! என்று கேட்டது முயல்.  நரியும் வேறு வழியில்லாமல் மானை விடுவித்தது.  மான் மகிழ்ச்சியுடன் முயலுடன் ஒன்று சேர்ந்து வாழ்ந்தது.

நீதிக் கருத்து : கூடா நட்பு கேடாய் முடியும்.





No comments:

Post a Comment