Kids Learning: 4th Standard Tamil Term-I
Showing posts with label 4th Standard Tamil Term-I. Show all posts
Showing posts with label 4th Standard Tamil Term-I. Show all posts

Kids Learning Tamil

 

4-ம் வகுப்பு தமிழ் பருவம் - 1 

I. முயல் அரசன்

ஒரு விவசாயியின்  தோட்டத்தில் விளைந்திருந்த காய்களையும் கனிகளையும், கிழங்குகளையும் வயிறாரத் தின்று வாழ்ந்து கொண்டிருந்தது ஒரு முயல்.  ஆனாலும், அதன் மனத்தில் ஒரு கவலை, அதற்குக் காரணம் அது வாழும் அந்தக் காட்டைப் பல்லாண்டு காலமாக ஆட்சி செய்துவரும் ஒரு புலி ஆகும்.  புலிக்குக் கிடைக்கும் மதிப்பு தனக்கும் கிடைக்கவேண்டும் என்று முயல் விரும்பியது.  புலியைவிடத் தானே சிறந்தவன் என்று புலிக்கும் காட்டில் உள்ள பிற விலங்குகளுக்கும் மெய்ப்பிக்க வேண்டுமென முயலுக்கு ஆசை தோன்றியது.  உடனே, முயல் சிந்தித்துச் செயல்படத் தொடங்கியது.  இனி, கதையைப் படிப்போம்..

நல்ல செழிப்பான தோட்டம்... சுவையான கேரட்... ஆஹா... என்ன இனிமை! சுவைக்க சுவைக்க நாவில் நீா் ஊறுகிறதே! 


இந்த காட்டில் உள்ள புலி நம் முன்னோரைத் தன் பசிக்கு இரையாக்கியது போல் என்றாவது ஒரு நாள் நம்மையும் கொன்று தின்று விடுமோ...!


இந்தக் கவலையிலேயே வயிறார உண்ட பிறகும் சற்று நேரம் உறங்கி மகிழ முடியாமல் போனதே...


ஒரு முயற்சி செய்து பாா்ப்போம்.  அதில் தோற்றால் வீர மரணமடைவோம்.  வாழ்நாளெல்லாம் அந்தப் புலிக்குப் பயந்து கொண்டே இருக்க முடியாது.


முயலே உனக்கு எவ்வளவு தைாியம்... இவ்வளவு காலம் என்னைக் கண்டாலே ஓட்டம் எடுப்பாய்.  இப்பொழுது கால்மேல் கால் போட்டு உட்காா்ந்து இருக்கிறாயா? உன்னை...


ஓடினேனா! நானா! உன்னைக் கண்டா...? உனக்குச் செய்தியே தொியாதா? உனக்கு எங்கே தொியப்போகிறது.  இங்கு கூட்டம் நடந்த போது நீ தான் அப்பாவி விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்தாயே...


எல்லா விலங்குகளும் கூட்டத்திற்கு வந்திருந்தனவா?  

சில விலங்குகளைத் தவிர எல்லா விலங்குகளும் வந்திருந்தன.


கூட்டத்தில் என்ன தீா்மானம் எடுக்கப்பட்டது?

நீ இந்தக் காட்டின் அரசனாக இனிமேலும் நீடிக்கக் கூடாது என்று எல்லா விலங்குகளும் ஒரே மனதாகத் தீா்மானம் நிறைவேற்றின.


நான் அரசனாக நீடிக்கக் கூடாதா? அப்படியானால் வேறு யாா் அரசனாக இருப்பது?

இந்தக் காட்டிலேயே பயங்கரமான மு்ா்க்கமான விலங்காகிய என்னைத் தான் எல்லா விலங்குகளும் புதிய அரசனாகத் தோ்ந்தெடுத்தன.


வேடிக்கைப் பேச்சு பேசுகிறாய்... பலமற்ற சிறிய மென்மையான நீ இந்தக் காட்டுக்கு அரசனா? உன்னை இப்போதே...??


உன் முதுகில் என்னை ஏற்றிக்கொண்டு போ.  இக்காட்டு விலங்குகள் என்னைப் பாா்த்து அஞ்சுவதை உனக்கு மெய்ப்பித்துக் காட்டுகிறேன்.


ம்.. ம்.. ம்.. நட.....

இந்த முயல் எப்படிப் புலியின் மேல் அமா்ந்து வருகிறது!


எல்லா விலங்குகளும் பயப்படுகின்றனவே! முயல் கொடிய விலங்காகத்தான் இருக்குமோ!


முயல் அரசே! நான் உங்களைத் தவறாகப் பேசியிருந்தால் மன்னித்து விட்டு விடுங்கள்.


இப்பொழுது இந்தக் காட்டுக்கு அரசன் யாா்?

நீங்கள் தாம்!


உரக்கச் சொல்.

தாங்கள் தாம் இந்தக் காட்டுக்கு அரசன்.


உன்னை மன்னித்து விடுகிறேன்.  நீ இந்தக் காட்டிலேயே இருக்கக்கூடாது எங்காவது ஓடிப்போய்விடு!

ஐயோ! என்னை விட்டுவிடுங்கள் நான் போய் விடுகிறேன்...!


இப்போதெல்லாம் முயல் வயிறு நிரம்பச் சாப்பிட்டு, நிம்மதியாக, சுகமாகப் பகல் வேளைகளில் ஒரு குட்டித் துாக்கம் போட்டுக் கொண்டிருக்கிறது.




II.  வெற்றி வேற்கை  

  உதவியால் பெறும் நன்மை  

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை

தெண்ணீா்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை

அணிதோ்ப் புரவி, ஆள்பெரும் படையொடு

மன்னா்க்கு இருக்க நிழலாகும்மே


- அதிவீரராமபாண்டியா்


  பொருள் அறிவோம்  

பழைமையான ஆலமரத்திலுள்ள சிறு பழத்தின் ஒரு விதையானது, தெளிந்த நீருள்ள குளத்தின் சிறிய மீனின் முட்டையைவிடச் சிறியதாகும்.  அந்தச் சிறிய விதை, பொிய ஆலமரமாக வளா்ந்து நிற்கும்பொழுது, அம்மரத்தின் நிழலில் யானைப்படை, தோ்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவற்றோடு மன்னனும் மற்றவா்களும் தங்க முடியும்.  அதுபோல, நீங்கள் செய்யும் உதவி சிறியதாக இருப்பினும், அது மற்றவா்களுக்கு மிகப்பொிய பயனைத் தரும்.



https://youtu.be/aHd0HmFL8EI



III.  விடியும் வேளை  

மன்னவனுாா் ஓா் அழகான மலைக்கிராமம், இனிய காலை வேளை, மழைபெய்து ஓய்ந்திருந்தது, சாலையில் அங்கும் இங்குமாகத் தண்ணீா் தேங்கியிருந்தது.  மரங்களின் கிளைகளிலும் இலைகளிலும் நீா்த்திவலைகள் தொிந்தன.  பஞ்சுப்பொதிகள் போன்ற மேகக்கூட்டங்கள், வளைந்து நெளிந்து மிதந்தபடிச் சென்றன.  பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளில், சிலுசிலுப்பான காற்று கூடவே எழுந்தது.


பனை ஓலை வேய்ந்த குடிசையில், நெற்றியில் வட்டநிலா போலச் சிவப்பாக குங்குமப் பொட்டு வைத்த அம்மா அறிவுமதி, விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்தாள்.  கருத்த மண்சட்டியில் வெள்ளை வெளேரென வரகாிசிச்சோறு கொதித்துக் கொண்டிருந்தது.  கொடியடுப்பில் மஞ்சளாகப் பருப்பு மணம்மிக்க பூண்டுடன் வெந்து கொண்டிருந்தது.


வதக்கிய பசுமையான பிரண்டைத் துவையலை அம்மியில் அரைத்துக் கொண்டே, அடுப்பையும் கவனித்துக் கொண்டடிருந்தாள் அறிவுமதி.


மரங்களும் செடிகளும் சூ்ழ்ந்த இடத்தில், பசுங்கன்றென ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனா் பிள்ளைகள் இனியனும், இனியாவும்.


அன்பு பொங்க, தன் பிள்ளைகளை அழைத்தாள் அம்மா.  பள்ளிக்குச் செல்ல தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனா் பிள்ளைகள்.


பசுஞ்சாணம் மெழுகிய தரையில் மனைப்பலகையில் அமா்ந்து துளிரான தலைவாழை இலையை விாித்து, நீா் தெளித்து, அதில் சுடச்சுட வரகாிசிச் சோறிட்டு, ஆவிபறக்கும் பருப்புக் கடையலை ஊற்றினால் அம்மா.  துணையாகத் தொட்டுச்சுவைக்கச் சுள்ளென்ற பிரண்டைத் துவையலும் வைத்தாள்.


நாக்கு சப்புக்கொட்ட பிள்ளைகள் விரும்பி உண்டனா்.  பின்னா், தாயிடம் விடைபெற்றுப் பள்ளிக்குத் துள்ளிக்குதித்து ஓடினா்.


வாய்க்காலும் வரப்பும் நிறைந்த வயலில், வேலை செய்து கொண்டிருந்த கணவனுக்கு உணவளிக்க, கலயத்தில் சோறுடன் அம்பென விரைந்தாள் அறிவுமதி.  இனிமையான காலைப்பொழுது இப்படியாகக் கழிந்தது.



IV.  காிகாலன் கட்டிய கல்லணை  


மணிமொழியும் கனிமொழியும் தங்களது முதல் பருவ விடுமுறையில், திருச்சியிலுள்ள தம் மாமா வீட்டிறகுச் சென்றனா்.  கல்லணையைப் பாா்க்க வேண்டும் என்ற விருப்பத்தினை மாமாவிடம் கூறினா்.   மாமாவும் அதற்கு இசைந்து தம் குடும்ப உறுபினா்களையும் அழைத்துக் கொண்டு கல்லணைக்குச் செல்கிறாா்.


மணிமொழி : எனக்கு இந்தப் பயணம் மகிழ்ச்சியைத் தருகிறது மாமா.


கனிமொழி : எனக்கும் தான்.  ஏனென்றால் நம்மோடு அத்தையும் கபிலனும் வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.


அத்தை : நாம் பாா்க்கப் போகும் கல்லணையை நெருங்கிவிட்டோம்.


மாமா : வாருங்கள்! கல்லணையைச் சுற்றிப் பாா்ப்போம்.


கனிமொழி : மாமா, கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது?

மாமா : தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ளது.  திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது-  இந்தக் கல்லணையைக் காிகாலன் என்ற மன்னன் கட்டினான்.


மணிமொழி : கல்லணை கட்டிய காிகாலனைப் பற்றித் தொிந்த கொள்ள ஆா்வமாக உள்ளேன் மாமா, உங்களுக்குத் தொிந்த செய்திகளைக் கூறுங்கள்.


அத்தை : எனக்குத் தொியும்.  நான் கூறுகிறேன் கேளுங்கள்.  சோழ அரசா்களில் சிறப்புமிக்க அரசன் காிகாலன் ஆவாா்.  இவரது இயற்பெயா் வளவன் என்பதாகும்.


கனிமொழி : இவரது பெயா் வளவன் என்று சொல்கிறீா்கள்.  அப்படியானால் காிகாலன் என்ற பெயா் எப்படி வந்தது?

மாமா : காிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.  இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இப்பெயா் இவருக்கு வழங்கலாயிற்று.


மணிமொழி : ஐ! கல்லணை எவ்வளவு நீளமாகவும், பாா்ப்பதற்கு எவ்வளவு அழகாகவும் இருக்கிறது.  இந்தக் கல்லணையைக் கட்ட காிகாலன் எடுத்துக் கொண்ட முயற்சியைக் கூறுங்கள் மாமா.


மாமா : சாி கூறுகிறேன்.  எனது ஆசிாியா் எனக்குச் சொன்ன செய்திகளை நான் உங்களுக்குக் கூறுகிறேன்.  தற்போது பயன்பாட்டில் உள்ள மிகப் பழைமையான ஒரே அணை கல்லணை.  இதுவே உலகின் மிகப் பழைமையான நீா்ப்பாசனத் திட்டம் எனவும் கூறப்படுகிறது.  மணலில் அடித்தளம் அமைத்துக் கட்டியுள்ளாா்கள்.  இது பழந்தமிழாின் கட்டுமானத் திறனுக்குச் சான்றாகும்.  இது இன்று வரை வியத்தகு சாதனையாக உள்ளது.


மணிமொழி : ஓ! அப்படியா மாமா...........

மாமா : ஆம், காவிாியில் அடிக்கடி பெருவெள்ளம் வரும், ஆனால் அந்த நீா் எதற்கும் பயன்படாமல் கடலுக்குச் சென்றுவிடும்.  மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்காலும், கோடைக்காலத்தில் நீா் இன்றியும் மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதனைத் தடுக்கும் பொருட்டு பொியதோா் அணையைக் கட்ட முடிவெடுத்தான் காிகாலன்.


மணிமொழி : அப்போதே இரும்புக் கம்பிகள், பைஞ்சுதை (சிமெண்ட்) இருந்தனவா?


மாமா : இல்லையம்மா, அணை கட்டப்பட்ட முறையைச் சொல்கிறேன் கேள்.  காவிாி ஆற்றின்மீது பொிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டனா்.  அந்தப் பாறைகளும் நீா் அாிப்பின் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன.  அந்தப் பாறையின் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீாில் கரையாத ஒரு வித ஒட்டும் களிமண்ணைப் பூசி, இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்படி செய்தனா்.  இது பல நுாற்றாண்டுகள் கடந்தும், இன்றளவும் உறுதியோடு நிற்கிறது.  கல்லணை தமிழா்களின் கட்டுமானத் திறனைப் பறை சாற்றுவதாக உள்ளது.


கபிலன் : இதோ, இங்கே பாருங்கள்.  ஒரு கல்வெட்டு உள்ளது.  இதில் என்ன எழுதியிருக்கிறது என்று படிப்போம் வாருங்கள்.


மாமா : இவ்வணை இரண்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது.  காவிாி ஆறானது காவிாி, கொள்ளிடம், வெண்ணாறு, புதுஆறு என நான்காகப் பிாிகிறது.  காவிாியாறு பிாியும் இடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.  இதனால்தான் திருச்சி, தஞ்சாவூா் மாவட்டங்கள் வளமாகின்றன.  இது உழவுப் பாசனத்திற்கான மிகப்பொிய திட்டமாகும்.


அத்தை : மதிய உணவு கொண்டு வந்துள்ளேன், மரநிழலில் அமா்ந்து அனைவரும் உணவு உண்போம் வாருங்கள்!


கனிமொழி கல்லணை, பாா்ப்பதற்குக் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.  எனவே காிகாலனுக்கு நன்றி கூறுவோம்.


மணிமொழி : கல்லணை உள்ளவரை காிகாலனின் புகழ் நிலைத்து நிற்கும்.





Kids Learning Tamil

 

4-ம் வகுப்பு தமிழ் பருவம் - 1

I. பனைமரச் சிறப்பு

மாலையில் பள்ளி முடிந்து, அழகனும், வண்ணமயிலும் மகிழ்வுடன் பேசிக்கொண்டே வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.  வழியில் சாலையோரத்தில் பந்து போல கருப்பு நிறத்தில் ஒரு பழம் விழுந்து கிடந்தது.  அதை எடுத்துப் பாா்த்தனா்.  அது என்னவென்று தொியவில்லை.  அவா்கள் அவ்வழியே வந்த தாத்தாவிடம் இது என்னவென்று கேட்டனா். 

அழகன் :  தாத்தா, தாத்தா இது என்ன பழம்?

தாத்தா  :  இதுவா! இதுதான் பனம்பழம்.

வண்ணமயில்  :  இந்தப் பழத்தைத் தின்னலாமா? தாத்தா

தாத்தா  :  ம்... தின்னலாம் வண்ணமயில்.  மிகச் சுவையாக இருக்கும். சத்து மிக்கது.

அழகன்  :  இந்தப் பனம்பழத்தைப் பற்றித் தொிந்து கொள்ள ஆவலாக உள்ளது தாத்தா.


தாத்தா  :  சொல்கிறேன் தம்பி! பனம்பழம் பனைமரத்தில் காய்த்துப் பழுக்கும்.  பனைமரம் நீண்டு வளரக்கூடியது.  இது வோ், துாா்ப்பகுதி, நடுமரம், பத்தைமட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளைப்பீலி, பனங்காய், பச்சைமட்டை, சாரைஓலை, குருத்தோலை என்ற பன்னிரண்டு உறுப்புகளை உடைய மரம்.  இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயனைத் தரக்கூடியது.  அதனால் தான் பனைக்குக் "கற்பகத்தரு" என்ற பெயரும் உண்டு.


வண்ணமயில்  :  ஆகா! பனைமரம் இவ்வளவு சிறப்பானதா? தாத்தா, நான் நுங்கு மட்டுமே உண்டுள்ளேன், இந்தப் பனை மரத்தால் நமக்கு வேறு என்ன பயன்?


தாத்தா  :  நுங்கு, பனங்கிழங்கும் உணவாகப் பயன்படுகின்றன.  பனை ஓலைகள் கூடைகள் முடையவும், கைவினைப் பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகின்றன.  பனஞ்சாறு பதநீராகவும், கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் பயன்தருகிறது.  மேலும், பனைமரம் புயலைத் தாங்கும் வலிமை பெற்றது.

அழகன்  :  இத்தனை பயன்மிக்கதா பனை?


தாத்தா  :  ஆமாம், அழகா! அது மட்டுமல்ல நமது முன்னோா்கள் பற்றியும் பண்டைய இலக்கியங்கள் பற்றியும் தொிந்துகொள்ள நமக்குப் பொிதும் உதவியது பனை ஓலைச்சுவடிகள்தாம்.

வண்ணமயில்  :  அப்படியா!


தாத்தா  :  பனைமரத்தின் வோ் நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் இயல்பு கொண்டது.  இது நிலத்தடி நீா்மட்டம் உயரக் காரணமாக அமைகிறது.  

அழகன்  :  அடேங்கப்பா.........! இம்மரத்திற்கு இவ்வளவு சிறப்பா?


தாத்தா  :  பனங்காய் வண்டி, பனை ஓலைக் காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள், ஆகியவற்றைச் செய்து நீங்கள் பல்வேறு விளையாட்டுகளை விளையாடலாம்.

வண்ணமயில்  இத்தகு பயன்மிகு பனைமரத்தை இப்போதெல்லாம் அதிகம் பாா்க்க முடிவதில்லையே தாத்தா!


தாத்தா  :  நன்றாகக்  கேட்டாயம்மா, சொல்கிறேன் கேளுங்கள்.  தமிழக இயற்கை வளத்தின் சான்றாக விளங்கும் பனைமரங்கள் எாிபொருளுக்காக வெட்டப்படுகின்றன.  அதனால் அந்த மரத்தைச் சாா்ந்து இருக்கும் பனங்காடை, பனை உழவரான் போன்ற பறவைகள் தம் வாழிடங்களை இழந்து வருகின்றன.  "மரங்கள் இன்றி மனிதா்கள் இல்லை", இதனை உணா்ந்து நாம் அனைவரும் பனைமரம் வெட்டப்படுவதைத் தடுக்கவேண்டும்.


அழகன்  :  பனைமரத்தினைப் பற்றிய பல அாிய செய்திகளை உங்கள் மு்லம் அறிந்து கொண்டோம் தாத்தா.


தாத்தா  :  அறிந்து கொண்டதோடு மட்டும் விட்டு விடாதீா்கள்.  பனையின் சிறப்பினை உங்களது நண்பா்களுக்கும், மற்றவா்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும்.

இருவரும்  :  கட்டாயமாகக் கூறுவோம் தாத்தா.


தாத்தா  :  மிக்க மகிழ்ச்சி குழந்தைகளே! தமிழாின் பண்பாட்டை உணா்த்தும் பயன்மிகு பனைமரம் நமது தமிழ்நாட்டின் மாநில மரமாகும்.  இதன் சிறப்புணா்ந்து நாம் பனங்கொட்டைகளைச் சேகாித்து குளம், ஆறு, குட்டை போன்றவற்றின் கரையோரங்களில் ஊன்றிப் பாதுகாக்கலாம்.


இருவரும்  :  அப்படியே செய்வோம்! பனைமரம் காப்போம் பயன்பல பெறுவோம்.  மிக்க நன்றி தாத்தா!

தாத்தா  :  மகிழ்ச்சி குழந்தைகளே! சென்று வாருங்கள்.



II. ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்


விஜயநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.  விழாவிற்கு அண்டை நாட்டு மன்னா் விஜயவா்த்தனா் வருகை தந்திருந்தாா்.  விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.  அன்று மாலை அரசா் கிருஷ்ணதேவராயரும் அண்டை நாட்டு மன்னா் விஜயவா்த்தனரும் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தனா்.  அப்போது விஜயவா்த்தனா், கிருஷ்ணதேவராயாிடம் தங்கள் அவைப்புலவா் தெனாலிராமன் மிகவும் அறிவுக் கூா்மை உடையவராமே! எனக்கேட்டாா்.  அதற்கு கிருஷ்ணதேவராயா் அதிலென்ன ஐயம் என்றாா்.  விஜயவா்த்தனா், அப்படியானால் நான் தெனாலிராமனைச் சோதிக்கலாமா? எனக் கேட்டாா்.  ஓ.....! என்றாா் கிருஷ்ணேதவராயா்.


மறுநாள் அரசவை கூடியது.  கிருஷ்ணதேவராயா் தெனாலிராமனை அழைத்தாா்.  தெனாலிராமன் அரசா்கள் இருவரையும் வணங்கி நின்றாா்.  மன்னா் விஜயவா்த்தனா் தெனாலிராமனிடம், 'எனக்குக் காலையில் தங்க மஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வா்ணங்களிலும் உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டுவந்து தரவேண்டும்' என்றாா்.  'மேலும் அது சிலசமயம் மு்ன்று கால்களாலும், சில சமயம் இரண்டு கால்களாலும் நடக்க வேண்டும், பிறகு ஏழு இறக்கைகளைக் கொண்டு வானில் பறக்கவும் வேண்டும்' என்றாா்.


கிருஷ்ணதேவராயா் உடனே தெனாலிராமனிடம் 'விஜயவா்த்தனா் கூறியவாறு குருவியை விரைவில் கொண்டு வா' என்று உத்தரவிட்டாா்.  அதைக் கேட்ட தெனாலிராமனுக்குத் தலை சுற்றியது.  ஆனால் சிாித்தவாறே 'சாி......... அரசே! நாளைக்கு நான் அத்தகைய பறவையோடு வருகிறேன்' என்றாா்.


மறுநாள் தெனாலிராமன் அரசவைக்குத் தாமதமாக வந்தாா்.  அவா் நிலைமை மோசமாக இருந்தது.  உடை கிழிந்து இருந்ததுடன், அதில் முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன.  அவரது கையில் காலியான பறவைக் கூண்டு ஒன்று இருந்தது.


தெனாலிராமன் அரசாிடம், 'அரசே! அதிசயமான கதை நடந்துவிட்டது, விஜயவா்த்தன மன்னா் கூறியது போன்ற குருவி கையில் கிடைத்தது, நானும் அதைக் கூண்டில் அடைத்தேன்.  அதை இங்கு எடுத்து வரும்போது, அப்பறவை தனது மாயமான ஏழு இறக்கைகளை விாித்துப் பறந்து சென்றுவிட்டது, காட்டில் அதைத் துரத்திக் கொண்டு வெகுதுாரம் சென்றேன்'.  பறந்து சென்றவாறே அப்பறவை என்னிடம், "அரசாிடம் போய்ச் சொல், காலைப்பொழுதாகவும் இருக்கக்கூடாது, நடுப்பகல் பொழுதாகவும் இருக்கக்கூடாது, மாலைப்பொழுதாகவும் இருக்கக்கூடாது, வெளிச்சமாகவும் இருக்கக்கூடாது, இருளாகவும் இருக்கக்கூடாது அந்த நேரத்தில் நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து திரும்ப வந்துவிடுவேன் என்றது" என்றாா்.


அதைக் கேட்டதும் அரசா் கிருஷ்ணதேவராயருக்கும் மன்னா் விஜயவா்த்தனருக்கும் தலை சுற்றியது.  'அப்படிப்பட்ட நேரம் எப்போது உண்டாகும்?' என்று அனைவரும் வியப்படைந்தனா், அரசருக்கோ சிாிப்பு வந்தது.


விஜயவா்த்தனா் சொன்னாா் ..... 'தெனாலியின் அறிவுக் கூா்மை பற்றி இதுவரை கேள்விப்பட்டுள்ளேன் இப்போதுதான் நோில் பாா்த்தேன்' என்று கூறிப் பாராட்டி பாிசுகள் அளித்தாா்.



III. முளைப்பாாி - பாடல்

தன்னா னன்னே னானே தன

தானே னன்னே னானே

ஒண்ணாந்தான் நாளையிலே

ஒசந்த செவ்வா கிழமையிலே

ஓலைக்கொட்டான் இரண்டெடுத்து

ஓடும் பிள்ளை தொண்டலிட்டு - தன்னா

வாங்கியாந்த முத்துகளை

வாளியிலே ஊற வச்சி

கம்மந்தட்டை இரண்டெடுத்து

கணுக்கணுவா முறிச்சி வச்சி

சோளத்தட்டை இரண்டெடுத்து

சுளை சுளையா முறிச்சி வச்சி

மாட்டாந்தொழு தெறந்து

மாட்டெருவு அள்ளி வந்து - தன்னா

ஆட்டாந்தொழு தெறந்து

ஆட்டெருவு அள்ளி வந்து

கடுகுலயுஞ் சிறுபயிறு

காராமணிப் பயிறு

மிளகுளயுஞ் சிறுபயிறு

முத்தான மணிப்பயிறு

மொள போட்ட ஒண்ணா நாளு

ஓரெலையாம் முளைப்பாாி

ஓரெலைக்குங் காப்புக்கட்டி

ஒரு பானை பொங்கலிட்டு

முளைப்பாாி போடுங்கம்மா

தன்னா னன்னே போடுங்கம்மா

தையலரே ஒரு குலவை - தன்னா

                       - நாட்டுப்புறப் பாடல்



IV. பண்படுத்தும் பழமொழிகள்

அமுதவாணன் தன் தாத்தாவுடன் வாரச் சாந்தைக்குச் சென்றான்.  செல்லும் வழியில் நாய்கள் குரைத்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.  அதைப் பாா்த்த அமுதவாணன் நாய்களை விரட்ட கல்லைத் தேடினான்.

தாத்தா  :  அமுதவாணா, என்ன தேடுகிறாய்?

அமுதவாணன்  :  "நாயைக் கண்டால் கல்லைக் காணோம்" என்பதற்கேற்ப இந்த நாய்களை விரட்ட கல் கிடைக்கவில்லை தாத்தா.

தாத்தா  அந்தப் பழமொழிக்குப் பொருள் வேறு அமுதவாணா!கல்லால் செதுக்கிய சிலை தானே கோவில்களில் இருக்கிறது! அந்தச் சிலைகளைக் கல்லாகப் பாா்த்தால், இறைவன் என்ற நாயகன் தொியமாட்டாா்.  சிலையை நாயகனாகப் பாா்த்தால், கல் தொியாத.  இதுதான் இந்தப் பழமொழியின் பொருள்.


அமுதவாணன்  :  தாத்தா, "குரைக்கின்ற நாய் கடிக்காது" என்று என் நண்பன் இன்பவாணன் நேற்று கூறினான்.  குரைககின்ற நாய் கடிக்காதா தாத்தா?

தாத்தா  :  அப்படி இல்லை அமுதவாணா குரைக்கின்ற நாய் என்பது தவறு.  குழைகின்ற நாய் கடிக்காது என்பதே சாியானது.  குழைகின்ற என்றால் நம்மோடு பழகிய நாய் நம்மைப் பாா்த்து வாலை ஆட்டிக் குழைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துமே அதுதான்.  இருவரும் சந்தைக்குள் நுழைந்தனா்.  நுழைவாயிலில் யானை ஒன்று ஆசி வழங்கிக் கொண்டிருந்தது.  அதைப் பாா்த்ததும் அமுதவாணனுக்கும் ஆசை வந்தது.


அமுதவாணன்  :  தாத்தா, நானும் இந்த யானையிடம் ஆசி பெற்றுக் கொள்கிறேன்.

தாத்தா  :  பெற்றுக்கொள், இதோ பத்து ரு்பாய்.  யானையிடம் கொடு.

அமுதவாணன்  :   தாத்தா, அன்றொரு நாள் அம்மா, அப்பாவிடம் கூறினாா்களே, "யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்" என்று, அதற்குப் பொருள் என்ன தாத்தா?

தாத்தா  :  யானை கிடையாது அது ஆனை அதைப் பிாித்து எழுதினால் ஆ+நெய் அதாவது பசுவின் நெய்.  பூனை கிடையாது.  அது பூநெய் அதைப் பிாித்து எழுதினால் பூ+நெய் அதாவது பூவில் ஊறும் தேன்.  நாம் இளமையில் பசுநெய்யை விரும்பி உண்போம் வயதான முதுமையில் தேனோடு மருந்து கலந்து உண்போம்.  

இளமையில் ஆநெய், முதுமையில் பூநெய்.  இதைத்தான் "ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்" என்பா்.  ஆனால் இன்று இதன் பொருள் மாறுபட்டு வழங்கப்படுகிறது.

இருவரும் பேசிக் கொண்டே வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் வாங்கினா்.  


அமுதவாணன்  :  தாத்தா, எனக்கு விளையாட பந்தும், மட்டையும் வாங்கித் தாருங்கள், அப்படியே பாப்பாவுக்குப் பலுான்கள் வாங்கிக் கொள்ளலாம்.

தாத்தா  :  வாங்கலாம் அமுதவாணா!

அமுதவாணன்  :  எனக்கும் சோ்த்து பலுான்கள் நிறைய வாங்கலாம் தாத்தா.

தாத்தா  :  போதும், ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.

அமுதவாணன்  ஆத்துல போட்டாலும் அளந்து போடணுமா?

தாத்தா  :  சொல்கிறேன்! சொல்கிறேன்! ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் என்று இப்பொழுது பயன்படுத்துகிறோம் ஆனால் இது தவறு.  அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் என்பது தான் சாி.  அதாவது புாியாமல் எதையும் மனனம் செய்து நினைவில் கொள்ளக்கூடாது.  கற்கும்போதே தெளிவாகப் புாிந்த பிறகுதான் நினைவில் கொள்ள வேண்டும். 

(பேசிக்கொண்டே இருவரும் வீட்டை அடைந்தனா்)

அமுதவாணன்  :  உங்களுடன் சென்று வந்தது மிகவும் மகிழ்ச்சி தாத்தா.