Kids Learning: Kids Learning Tamil

Kids Learning Tamil

 

3-ம் வகுப்பு தமிழ் பருவம்-III

I. உயர்திணையும் அஃறிணையும்

எழிலி : "அப்பா, அப்பா, இங்கே வாங்க, இந்தப் பூனையைப் பாருங்க.  காலெல்லாம் ஒரே சேறு.  அந்தச் சேற்றுக் காலோட நம்ம வீட்டுக்குள்ளும் வந்திருக்கு".

அப்பா : "அட, ஆமா! எங்கேயிருந்து சேற்றைப் பூசிக்கொண்டு வந்ததுன்னு தெரியலேயே?"

எழிலி : "என்னப்பா, இது? தரையில என்ன இருக்குன்னு இந்தப் பூனைக்குத் தெரியாதா? பார்த்து நடக்கலாம்ல."

அப்பா : "அது சரி, எழிலி, நீயா இருந்தா என்ன செய்வே?"

எழிலி : ஐ! நானா இருந்தா, கால்ல சேறு படாம ஒரே தாண்டா தாண்டி ஓடி வந்திருப்பேனே."

அப்பா : அதைத்தான் நானும் சொல்ல வர்றேன்.  சேற்றில் கால் பட்டால் அழுக்காகும்னு உனக்குத் தெரியுது.  ஆனால், பூனைக்குத் தெரியலே.  ஏன் தெரியுமா?

எழிலி : தெரியலயே, நீங்களே சொல்லுங்கப்பா.

அப்பா : ஏன்னா, நாமெல்லாம் உயர்திணை.  விலங்கு, பறவையெல்லாம் அஃறிணை.  அதனாலதான், என்ன நடக்கப் போகுதுன்னு நமக்குத் தெரியுது.  ஆனா, ஆனா, விலங்கு, பறவைக்கு நாம் என்ன செய்கிறோம்? செய்தா என்னாகும்னு புரிந்துகொள்ள முடியல.

எழிலி : ஓ! அதுதானா? அது சரிப்பா, உயர்திணை, அஃறிணைன்னு சொன்னீர்களே, அப்படின்னா என்னப்பா? 

அப்பா : நான் கேட்கிறதுக்கு முதல்ல விடை சொல்லு, உன்னைச் சுற்றி யாரெல்லாம் இருக்காங்க? 

எழிலி : இம். இம். . . நீங்க, அம்மா, அண்ணா, அக்கா, தம்பி, சிற்றப்பா, பெரியப்பா, அத்தை அப்புறம். . . என்கூட விளையாடு வாங்களே மீனா, ரோசி, கம்ரூன், பாபு, சுரேஷ், கௌதம், சீனு, ராதிகா, ரம்யா, ஐசு, சிருஷ்டி, பாரு, வித்யூன். . . . .

அப்பா : போதும். . . . போதும்.  உனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்கன்னு எனக்குத் தெரியும்.  உன்னைச் சுற்றி இருக்கிறவங்கன்னு நீ இப்ப சொன்னேல, இவங்க எல்லாருக்கும் உயிரிருக்கு.  அதுமட்டுமா? நல்லது எது? தீயது எதுன்னு பகுத்துப் பார்க்கும் பண்பும் இருக்கு.  இவங்க மட்டுமில்லாம நம்மைப் போலவே பண்புகள் இருக்கிற மக்கள், தேவர், நரகர் இவங்களை யெல்லாம் உயர்திணைன்னு தான் சொல்றாங்க.  அதுசரி, எழிலி.  நீ இன்னும் வேறெ என்னல்லாம் உன்னைச் சுற்றி இருக்குன்னு சொல்லலியே?

எழிலி : வேறே என்னப்பா இருக்கு?

அப்பா : இதோ இந்த நாற்காலி, மேசை, குடம், மின்விசிறி, புத்தகம் இதுமட்டுமல்லாம பூனை, நாய், மாடு, ஆடு முதலான விலங்குகள், கோழி, காகம், குயில், மயில், கிளி முதலான பறவைகள் அப்படின்னு நிறைய பார்க்கிறாய் அல்லவா! இவற்றில் பறவை, விலங்குகளுக்கு எல்லாம் உயிர் இருக்கு.  ஆனால் நாற்காலி, மின்விசிறி இவை போன்றவற்றிற்கு உயிரில்லை.  அதனால, இந்த மாதிரி உயிருள்ள, உயிரற்ற பொருள்கள் எல்லாம் உயர்திணைல சேர்க்க முடியாது.  இவையெல்லாம் உயர்திணை அல்லாத திணை.  அதனாலதான் அஃறிணைன்னு சொல்றோம்.  நிலம், நீர், மலை, மரம், கடல் இவையெல்லாம் கூட அஃறிணை தான். 

எழிலி : ஆனா நான் பார்க்கிற பொருள்ல இதுதான் உயர்திணை, இதுதான் அஃறிணைன்னு எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

அப்பா : அடடே, நீ நல்லாவே யோசிக்கிற எழிலி.  ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பேரு இருக்குல்லே, அதை வைத்து நீ எளிதாக் கண்டுபிடிக்கலாம்.  அந்தப் பெயரை வைத்தே அதற்கு உயிரிருக்கா, நம்மைப்போல அது சிந்திக்குமா? வேலை செய்யு மான்னு கண்டு பிடிக்கலாம்ல.  பெயரை வைத்தே என்ன திணை, பால், எண், இடம்னு எல்லாத்தையும் கண்டு பிடிக்கலாம்.  இதைப்பற்றி இன்னும் விரிவாக நாளைக்குச் சொல்றேன்.  இதுவரைக்கும் சொன்னதில என்ன புரிஞ்சு கிட்டன்னு எனக்கும் தெரியணும்ல தென்னை மரம் உயர்திணையா, அஃறிணையா, எங்கே சொல்லு பார்க்கலாம்.

எழிலி : இம்.... இம். மரமெல்லாம் அஃறிணை தானே.  தென்னை மரம் அஃறிணை தாம்பா.  இப்ப நல்லாப்  புரிந்து கொண்டேன் அப்பா.  

திணை என்பது, ஒழுக்கம்.  அதன் அடிப்படையில் உயர்திணை, அஃறிணை என இரண்டாகக் கூறுவர்.




II. காகமும் நாகமும் கதை

காகம் ஒன்று ஆலமரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.

காகம் வெளியே இரை தேடச் சென்றது.

தினந்தோறும் பாம்பு ஒன்று வந்து முட்டைகளை உடைத்தது.

தினந்தோறும் உடைந்த முட்டைகளைப் பார்த்த காகம் மிகவும் வருத்தம் அடைந்தது.

காகம் தன் நண்பன் நரியிடம் அறிவுரை கேட்டது.

நண்பனே! அந்தக் கொடிய பாம்பை அழிப்பதற்கு ஒரு வழி சொல்.

இளவரசியின் விலையுயர்ந்த பொருள் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து முட்டைகள் இருக்கும் கூட்டின் அருகே போட்டுவிட்டு.

சரி! நீ சொன்னபடியே கொண்டு வந்து போடுகிறேன்.  அப்படிப் போட்டால் என்ன நடக்கும்?

முதலில் நீ கொண்டுவந்து போடு.  அப்புறம் என்ன நடக்கிறது என்று பார்!

இளவரசி தன் தோழிகளுடன் குளத்தில் நீராடிக் கொண்டிக்க, கரையில் முத்துமாலை இருப்பதை காக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

காக்கை, இளவரசியின் முத்து மாலையைக் கொத்திக்கொண்டு பறந்தது.

யாரங்கே?... காவலர்களே அந்தக் காகம் என் முத்துமாலையை எடுத்துச்செல்கிறது அதைப் பிடியுங்கள்.

காவலர்கள் வேல்களுடன் காக்கையைத் துரத்திக்கொண்டு ஓடினர்.

காக்கை, தன் கூட்டினருகே முத்து மாலையைப் போட்டது.

அதைப்பார்த்த வீரன் மரத்தில் ஏறி காகத்தின் கூட்டினருகே முத்துமாலையைப் பார்த்தான்.

முத்து மாலையை எடுக்க முயற்சிக்கும்போது அங்கிருந்த பாம்பு சீறிக்கொண்டு வீரனைக் கடிக்க வந்தது.

அதைப் பார்த்துக் கோபமடைந்த வீரன் பாம்பை வேலால் குத்திக் கொன்றான்.

முத்து மாலையை எடுத்துக் கொண்டு சென்றான்.

இளவரசியிடம் முத்து மாலையை வீரர்கள் கொடுத்தனர்.

காகம் பாம்பின் தொல்லை இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது.

கீச் .... கீச் .... கீச் ....

நீதிக் கருத்து : பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்தல்.



https://youtu.be/0MY4emi9J3M



III.  தமிழ் மொழியின்    பெருமை

உலகில் உள்ள மொழிகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தது தமிழ்மொழி.  'அமிழ்தினும் இனிய மொழியாக' நம் தமிழ்மொழி விளங்குகிறது. தமிழ், தமிழ் என்று சொல்லிப் பாருங்கள்.  உங்கள் காதில் 'அமிழ்து, அமிழ்து எனத் தேனாய்ப் பாய்வதை உணர் வீர்கள்.  அதனால்தான், பாரதியாரும், 

'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்று பாடியுள்ளார்.  மேலும், 

'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்'

எனத் தமிழைப் போற்றிப் புகழ்கிறார்.

'தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்'

எனப் பாரதிதாசனாரும் தமிழின் பெருமையைக் கூறுகிறார்.

இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் இணைந்தது, முத்தமிழ்.  இம்மூன்று துறைகளின் கீழ் தமிழ்மொழியின் வெளிப் பாட்டைக் காணலாம்.

  • எழுத்து நடை வாயிலாக வெளிப்படுவது, இயல் 
  • பாடல்கள் மூலம் வெளிப்படுவது, இசை
  • அங்க அசைவுகளுடன் வெளிப் படுவது, நாடகம்.

பழங்காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய மண் பாண்டங்கள், அணிகலன்கள், பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள  அகழாய்வுகள் உதவு கின்றன.  அண்மையில் சிவகங்கை மாவட்டத்தில் 'கீழடி' என்னுமிடத்தில் நடைபெற்ற அகழாய்வில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளது.  இதன் மூலம் தமிழ்மொழி 'ஆதித் தமிழர் மொழி' என்பது புலப்படுகிறது.

கணியன் பூங்குன்றனார் எழுதிய 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்னும் புறநானூற்றுப் பாடல் தொடர் இன்றளவிலும் ஐக்கிய நாடுகள் அவையில் தமிழ் மொழியின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.  

நடுவன் அரசு 12.10.2004 ஆம் ஆண்டு தமிழ்மொழியானது, பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் திறனுள்ள 'செம்மொழி' என அறிவித்துள்ளது.  இது தமிழ் மொழிக்கு வளமை சேர்ப்பதாக உள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டுகளை விளக்கும் பாறை ஓவியங்கள், கல்வெட்டுகளில் காணப்படும் அரசர்களின் கொடை பற்றிய செய்திகள், இலக்கியங்கள் குறிப்பிடும் பண்பாட்டுக் கூறுகள் போன்ற யாவும் தமிழர்களின் வீரம், கொடை, பண்பாடு, விருந்தோம்பல் முதலான பண்புகளைத் தெளிவாக விளக்குகின்றன.

'தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா'

என்னும் பாடல் வரிகள், தமிழர்களின் பெருமையைக் கூறுகின்றன.  தமிழர்களின் எழுத்து, சொல், உணர்வு, ஒழுக்கம், வாழ்வு, பண்பாடு ஆகியவற்றைத் தமிழின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியம் எடுத்துக் கூறுகிறது.  உலக மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சிறப்புப் பெற்று விளங்கும் நூல், திருக்குறள், 'உலகப் பொதுமறை' என்று அழைக்கப்படும் இந்நூலில், தமிழரின் வாழ்வியல் நெறிகள் காணப்படுகின்றன.

தமிழ்மொழியின் சிறப்பை உணர்ந்த அயல்நாட்டார் பலரும் தமிழைக் கற்றுக் கொண்டதோடு, தமிழில் பல இலக்கண, இலக்கியங்களையும் படைத்துள்ளனர்.  திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்தவர், ஜி.யு.போப்.  இவர், ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார் தம்மைத் 'தமிழ்  மாணவன்' என்றே உலகோர் அறியச்செய்தார்.

நம் தாய்மொழியான தமிழ், ஈராயிரம் ஆண்டுக்கு மேல் பேச்சிலும் எழுத்திலும் பயன் பாட்டில் இருந்துவருகிறது.  நாளும் பொலிவுடன் வளர் தமிழாய் தன் பெருமையை உலக அரங்கில் நிலைநிறுத்தி வருகிறது.  ஆகவே, இன்னும் எத்தனையோ ஆண்டுகள் பிறரை வாழ வைக்கவும், வழிநடத்தவும் திறமையுள்ள மொழியாக விளங்கும் நம் தமிழ்மொழியை உலகில் உள்ளோர் பாராட்டும் வகையில் மென்மேலும் உயர்த்த உறுதுணையாக இருப்போம்.



IV. அறிவூட்டும் தொலைக்காட்சிச் செய்திகள்

ஒருநாள் மாலைப்பொழுது. இளவரசி, பூங்குழலி இருவரும் பள்ளி முடிந்து வீடு திரும்பினர். அப்பொழுது திடீரென்று வானில் ஒலி கேட்டது.  மேலே பார்த்ததும் விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது.  சிறிது நேரத்தில் வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து பேரொலியுடன் இடி இடிக்கத் தொடங்கியது.  அச்சமயம் பெய்த மழைத் தூறல், இளவரசியையும் பூங்குழலியையும் நனைத்தது.

இளவரசி : நாம் வீட்டிற்குச் செல்வதற்குள் முழுவதுமாக நனைந்து விடுவோம் போல் இருக்கிறதே! அதோ, அந்தக் கடையில் சிறிதுநேரம் நின்று விட்டு, மழை விட்டதும் செல்வோமா?

பூங்குழலி : சரி. நாமாவது மழையில் நனையாமலிருக்க இங்கே ஒதுங்கி விடுகிறோம்.  ஆனால், வானில் பறக்கின்றதே விமானங்கள்.  அவற்றின் பாதையை இந்தக் கருமேகங்கள் மறைக்காதா? 

இளவரசி : அதனால் தான் விமானம், கருமேகங்களைத் தாண்டி உயரத்தில் பறக்கிறது.

பூங்குழலி : அது எப்படி உனக்குத் தெரியும்?

இளவரசி : நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதைப் பார்த்தேன்.  அதில் விமானம் பறப்பது பற்றி விரிவாகக் கூறினார்கள்.

பூங்குழலி : அப்படியா? தொலைக் காட்சியில் இது பற்றியெல்லாம் சொல்கிறார்களா?

இளவரசி : ஆம். பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. விமானம் உயரத்தில் பறக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.  புயல், மேகமூட்டம், இடி, மழை போன்றவற்றால் அதன் பயணம் பாதிக்கப்படுவதில்லை என்பதைக் குறும்படம் மூலம் விளக்கினார்கள்.

பூங்குழலி : கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதே! வேறு என்னென்ன நிகழ்ச்சிகளைத் நீ தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறாய்? மழை, தூறலாகத்தான் இருக்கிறது.  பேசிக்கொண்டே செல்வோமா?

இளவரசி : கொஞ்சம் பொறு, பூங்குழலி.  மழை இன்னும் விடவில்லை.  சற்றுநேரம் கழித்துச் செல்வோம்.  இடிச்சத்தம் காதைப் பிளக்கிறது.

பூங்குழலி : இடி தானே இடிக்கிறது.  மழை, பெரிதாகப் பெய்யவில்லையே, மழை வந்தால் மரத்தடியில் ஒதுங்கி நின்று விடலாமே!

இளவரசி : இல்லை பூங்குழலி.  மரத்தடியில் நின்றால், இடி தாக்கி உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதைத் தொலைக்காட்சிப் செய்தியில் பார்த்திருக்கிறேன்.

பூங்குழலி : ஓ! சரி, சரி.. வேறு என்னவெல்லாம் நீ தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறாய்?

இளவரசி : பொம்மைப் படங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், செய்து பார்ப்போம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளைக்கூடப் பார்த்திருக்கிறேன்.

பூங்குழலி : தொலைக்காட்சி என்றாலே பொழுது போக்கும் ஒரு கருவியென நான் நினைத்திருந்தேன்.  அதனால்தான் திரைப்படம், திரைப்பாடல்கள், நாடகத் தொடர்கள் போன்றவற்றையே அடிக்கடி பார்க்க நேரிட்டது.  ஆனால், நீ கூறியதுபோல் புதிய செய்திகளை அறிந்து கொள்ளவும், அறிவை விரிவு செய்யவும் தொலைக்காட்சி உதவும் என்பதை இப்போது புரிந்துகொண்டேன்.  இனி, நானும் இவை போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பயனடைவேன்‌.

இளவரசி : மகிழ்ச்சி.  இனி நாள்தோறும் புதுப் புதுச் செய்திகளைத் தோழிகளுக்கு நாம் இருவருமே சொல்லலாம்.  சரி, இப்போது மழை நின்றுவிட்டது வா, வீட்டுக்குப் போகலாம்.




No comments:

Post a Comment