3-ம் வகுப்பு தமிழ் பருவம்-III
I. உள்ளங்கையில் ஓர் உலகம்
உலகைச் சுற்றிக் காட்டிடுவேன்
உனக்கு மகிழ்ச்சியைத் தந்திடுவேன்
என்ன வேண்டும் என்றாலும்
எண்ணும் முன்னே சொல்லிடுவேன்
இணைய வழியில் அனைவரையும்
இணைந்தே இருக்கச் செய்திடுவேன்
கடிதம் அனுப்ப வேண்டுமென்றால்
விரைந்தே அனுப்பத் துணைபுரிவேன்
தகவல் களஞ்சியம் நான்தானே
தரணி போற்றி மகிழ்ந்திடுமே
உலகைச் சுருக்கி உன்கையில்
உலவிடும் கணினி நான்தானே
என்றும் ஓய்வு எனக்கில்லை
எதிலும் சோர்வு என்றில்லை
எந்தப் பொருளின் செய்தியையும்
எடுத்துத் தருவேன் ஒரு நொடியில்
உள்ளங்கையில் ஓர் உலகம்
உள்ளதைக் காட்டும் கண்ணாடி
என்றே என்னை எல்லாரும்
ஏற்றம் கொண்டே அழைத்திடுவார்.
பாடல் பொருள்
கணினி நமக்குத் தகவல்களை உடனடியாகத் தருவதால் மன மகிழ்வு ஏற்படுகிறது. இணையத்தின் மூலமாக நல்ல நட்பை உருவாக்குகிறது. கடிதப் போக்குவரத்தை விரைந்து செயல்படுத்துகிறது. கணினி சிறந்த தகவல் களஞ்சியமாகச் செயல்படுகிறது. உலகையே உள்ளங்கையில் தரவல்லது. ஓய்வில்லாமல் உழைப்பதால், எந்தச் செய்தியைக் கேட்டாலும் உடனடியாக எடுத்துத் தருகிறது. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாகக் கணினி செயல்படுகிறது.
II. தூக்கணாங்குருவியும்
ஒட்டகச்சிவிங்கியும்
காட்டில் இருந்த பெரிய மரம் ஒன்றின் கிளையில் தன் குஞ்சுகளுடன் கூட்டில் தூக்கணாங்குருவி ஒன்று வசித்து வந்தது. அதன் குஞ்சுகள், கீச்... கீச்... என்று ஒலி எழுப்பி மகிழ்ச்சியுடன் இருந்தன. அப்போது அந்த வழியாக ஒட்டகச்சிவிங்கி ஒன்று வந்தது.
ஒட்டகச்சிவிங்கி : அப்பாடா... என்ன வெயில்... என்ன வெயில்... இந்த மரத்தின் அடியில் கொஞ்ச நேரம் ஒதுங்கலாம். என நினைத்தது. அப்போது தூக்கணாங்குருவி குஞ்சுகள் மகிழ்ச்சியுடன் சத்தமிட்டுக் கொண்டிருந்தன... என்ன ஒரே சத்தம்! என ஒட்டகச்சிவிங்கி மேலே பார்த்தது. மரக்கிளையில் உள்ள கூட்டில் இருந்த தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் சத்தமிட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்து கோபம் கொண்ட, ஒட்டகச்சிவிங்கி மரக்கிளையைப் பிடித்து உலுக்கியது.
தூக்கணாங்குருவி : ஏ! ஒட்டகச்சிவிங்கியே! ஏன் மரக்கிளையை உலுக்குகிறாய்? என் கூட்டிலுள்ள குஞ்சுகள் பயப்படுகின்றன.
ஒட்டகச்சிவிங்கி : உன் குஞ்சுகள் கத்துவது எனக்கு பிடிக்க வில்லை.
(அப்போது. . . தேனீ ஒன்று பறந்து வந்து மரத்தில் உள்ள பூவில் அமர்ந்தது)
தேனீ : ஒட்டகச்சிவிங்கியே! மரம் அனைவருக்கும் பொதுவானது. தூக்கணாங்குருவி கூடு கட்டி வாழ்கிறது. உனக்கு ஓய்வெடுக்க நிழல் தருகிறது. எனக்கு இம்மரத்தில் உள்ள பூக்களில் இருந்து தேன் கிடைக்கிறது. எனவே நாம் அனைவரும் நண்பர்களாக இருப்போம்.
ஒட்டகச்சிவிங்கி : இல்லை! இல்லை! நான் உங்களுடன் சேர முடியாது. எனக்கு இந்தக் குஞ்சுகள் கத்துவது பிடிக்க வில்லை.
(மீண்டும் மரக்கிளையை ஒட்டகச்சிவிங்கி உலுக்கியது)
தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் பயந்து, காப்பாத்துங்க. . . .
காப்பாத்துங்க என மீண்டும் அலறின.
தேனீ : நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். அருகில் உள்ள குளத்தில் புத்திசாலித் தவளை வாழ்ந்து வருகிறது. அதனிடம் சென்று உதவி கேட்போம்.
(தேனீ, ஒட்டகச்சிவிங்கியின் அடாத செயலை தவளையிடம் கூறியது. தூக்கணாங்குருவியும் தன் நிலையைக் கூறித் தவளையிடம் உதவி கேட்டது.
தவளை : உங்களுக்குக் கட்டாயம் உதவுகிறேன். தண்ணீர் குடிக்க வரும்போதெல்லாம் இந்த ஒட்டகச்சிவிங்கியின் கால்களில் மிதிபட்டு எங்கள் இனம் அழிந்து போகிறது. அதனால் நாம் படும் துன்பம் அதற்குத் தெரியவில்லை. அதற்கும் அந்த நிலை ஏற்பட்டால் தான், தானாகவே புரிந்துகொள்ளும் போலிருக்கிறது.
(மறுநாள், ஒட்டகச்சிவிங்கி வழக்கம்போல் அந்த மரத்தின் அருகில் வருகிறது)
ஒட்டகச்சிவிங்கி : அப்பாடா! இன்று கொஞ்சம் வெயில் பரவாயிலே. அட, அது என்ன? அந்தத் தேனீக்கூட்டம் எப்போது பார்த்தாலும் ஙொய்... ஙொய்..னு சத்தம் போடுதே. இரு, இரு, இப்ப உங்களை என்ன செய்கிறேன் பாருங்க.
தேனீக்களின் கூட்டை ஒட்டகச்சிவிங்கி, தன் தலையால் தட்டிக் கலைக்கிறது. சினம் கொண்ட தேனீக்கள், ஒட்டகச்சிவிங்கியின் காதை கடிக்கின்றன. வலி பொறுக்க முடியாமல், ஒட்டகச்சிவிங்கி அருகிலிருந்த குளத்தில் விழுகிறது. அது விழுந்ததால் அங்கிருந்த தவளைகள், அதன் உடலின்மீது அங்குமிங்கும் ஓடுகின்றன. தண்ணீரிலிருந்து தட்டுத்தடுமாறி எழுந்த ஒட்டகச்சிவிங்கி, மீண்டும் மீண்டும் கூச்சம் தாங்காமல் தண்ணீரில் விழுகிறது. தேனீக்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன.
ஒட்டகச்சிவிங்கி : ஐயோ தேனீக்களே என்னை கொட்டாதீர்கள். தவளைகளே என் மீது ஏறாதீர்கள் - என்று கத்தியது.
நமக்கு ஏற்பட்டது போலத்தானே அந்தத் தூங்கணாங் குருவிகளுக்கும் ஏற்பட்டிருக்கும். தங்கள் கூட்டைக் கலைத்ததால் தானே அந்தத் தேனீக்களும் என்னைக் கொட்டின. பாவம், அந்தத் தவளைகள் எத்தனை முறை அவற்றை நான் காலால் மிதித்திருக்கிறேன். எனக்கு வலித்தது போல் அவற்றிற்கும் வலித்திருக்கும் என்று ஒட்டகச்சிவிங்கி, தான் செய்த தவற்றை எண்ணுகிறது. இனிமேல், யாருக்கும் தொல்லை தரமாட்டேன். துன்பம் செய்ய மாட்டேன் என்று உண்மையாகவே மனம் வருந்தியது ஒட்டகச்சிவிங்கி. மேலும், தன் தவற்றைப் பொறுத்துக் கொள்ளுமாறு அனைவரிடமும் வேண்டியது. பின்னர், அனைவரோடும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தது.
நீதிக் கருத்து : நல்லதே நினைப்போம்! நன்மை பெறுவோம்!
III. வீம்பால் வந்த விளைவு
ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். அவன் குதிரையில் சென்று வாணிகம் செய்து வந்தான். ஒருநாள் அன்றைய வேலையை முடித்துவிட்டுக் களைப்புடன் வந்த அவன், சற்றுநேரம் ஓய்வு எடுக்க நினைத்தான். தனது குதிரையை அங்கிருந்த மரத்தடியில் கட்டி வைத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான்.
அச்சமயம் வீரன் ஒருவன், தனது குதிரையுடன் அதே மரத்தடியில் ஓய்வெடுக்க வந்தான். வணிகன் அந்த வீரனிடம், "உங்கள் குதிரையை சற்றுத் தள்ளி கட்டுங்கள். ஏனெனில், எனது குதிரை முரட்டுத்தனமானது" என்றான். அதற்கு வீரன், "முடியாது நான் இங்குத்தான் கட்டுவேன்" என்று சொல்லிக் குதிரையைக் கட்டிவிட்டு உணவு உண்ணச் சென்றான்.
வணிகன் கண் அயர்ந்து விட்டான். வீரன் உணவு உண்ணும் இடைவேளையில் வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டது. அதனால், வீரனுடைய குதிரையின் கால் உடைந்துவிட்டது. வீரன் உடனே வணிகனை எழுப்பினான். "என் குதிரையின் கால் உன் குதிரையினால் உடைந்து விட்டதால், எனக்கு நஷ்டஈடு கொடு" என்று வணிகனிடம் கேட்டான். அதனை வணிகன் ஏற்றுக்கொள்ளவில்லை. "நான் கட்டும்போதே என் குதிரையை முரட்டுக் குதிரை என்றேன். நீ தானே நான் சொன்னதை கேட்காமல் கட்டினாய்?" என்று வணிகன் மறுத்துவிட்டான்.
வணிகனே வா! நீதிபதியிடம் செல்லலாம், என்றான் வீரன். இருவரும் நீதிபதியிடம் சென்றனர். வீரன் அவரிடம் நடந்ததைச் சொன்னான். நீதிபதி, வீரன் சொன்னதைக் கேட்டுவிட்டு, வணிகனிடம் "என்ன நடந்தது?" எனக் கேட்டார். வணிகனோ, பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தான். உடனே நீதிபதி, "வணிகன் ஊமை போலிருக்கிறதே, காதும் கேட்கவில்லையோ, பலமுறை கேட்டும் பதில் சொல்லாமல் இருக்கிறானே" என்றார்.
அதற்கு வீரன், "அவன் பேசுவான், ஐயா. அவன்தான் எனது குதிரை முரட்டுத்தனமாது உனது குதிரையை அருகில் கட்டாமல் தூரத்தில் கட்டு எனக் கூறினான். நான்தான், எனது குதிரை வீரக்குதிரை என்று சொல்லிக் கட்டி வைத்தேன்" எனக் கூறி முடித்தான்.
வீரன் கூறியதைக் கேட்ட நீதிபதி. "வீரனே!" வணிகன் எதுவும் கூறத் தேவையில்லை. நீயே உனது குற்றத்தை ஒப்புக் கொண்டாய். "வீம்புக் குணம் படைத்த உனக்கு, வணிகன் எந்த வகையிலும் நஷ்ட ஈடு தரத் தேவையில்லை" என்று தீர்ப்பு கூறினார்.
நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டதும், வீம்புக் குணம் படைத்த வீரன் முகத்தில் அசடு வழிந்தது. அதைக்கேட்ட வணிகன், "ஐயா நீதிபதி அவர்களே! நான் மௌனமாய் இருந்ததற்கு மன்னித்துவிடுங்கள்; உண்மையைப் புரிந்துகொண்டு நல்ல தீர்ப்பளித்தீர்கள்; மிகவும் நன்றி!" என்று கூறினான்.
நீதிக் கருத்து : வீம்பு செய்தால் துன்பம் உண்டாகும்.
No comments:
Post a Comment